/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்காட்சிக்கு 'டெண்டர்' விட இடைக்கால தடை
/
கண்காட்சிக்கு 'டெண்டர்' விட இடைக்கால தடை
ADDED : டிச 05, 2025 07:02 AM
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள, 50வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சியை நடத்துவதற்கான, 'டெண்டர்' நடைமுறைகளுக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில், அடுத்தாண்டு 50வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சி நடக்க உள்ளது. 70 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சிக்கான டெண்டரில், பெங்களூருவைச் சேர்ந்த 'பன் வேர்ல்டு அண்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனமும் விண்ணப்பித்தது. ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அது தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
உரிய தகுதி இருந்தும், எவ்வித காரணத்தையும் தெரிவிக்காமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லாமல், சட்ட விதிகளுக்கு மாறாக, சுற்றுலா வளர்ச்சி கழகம் செயல்பட்டுள்ளது.
எனவே, வெளிப்படையான முறையில் டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை, டெண்டர் நடைமுறைகளை தொடர, இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அதற்கு அரசு தரப்பில், 'வழக்கில் விரிவாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதிலளிக்க உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, டெண்டர் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதி, டெண்டர் தொடர்பான அனைத்து நடைமுறைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

