ADDED : ஏப் 22, 2026 10:09 PM

சென்னை: தேர்தல் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சர்வதேச பார்வையாளர் குழுவினர், சென்னையில் நேற்று தேர்தல் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு துவங்குகிறது. தேர்தல் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக நமீபியா, பெரு, எகிப்து, மொரீசியஸ், பூடான் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து, 18 சர்வதேச பார்வையாளர்கள் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.
இவர்கள், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள என்.கே.டி., தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தனர்.
அப்போது, பள்ளியிலிருந்து ஓட்டு இயந்திரங்கள், மை, எழுதுகோல் உள்ளிட்ட பொருட்கள், தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை பார்வையிட்டனர்.
தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதன்ஜெய் நாராயணன் மற்றும் சென்னை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கட்டா ரவி தேஜா ஆகியோர், தேர்தல் நடைமுறைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
ஓட்டுச்சாவடி மையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டு இயந்திரம் மற்றும் எழுதுகோல் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொண்டு, அங்கேயே தங்கி விடுவர்.
இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும்முன், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படும். அதன்பின், ஓட்டுப்பதிவு தொடங்கும் என்பதை, பார்வையாளர்கள் குழுவினருக்கு விளக்கினர். செயல்பாடுகள் பற்றி அக்குழுவினர் மிகுந்த ஆர்வமுடன் கேட்டறிந்தனர். இன்று ஓட்டுப்பதிவு நடப்பதையும் இக்குழுவினர் பார்வையிட உள்ளனர்.
