ADDED : ஆக 14, 2025 11:41 PM
சென்னை :சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான செஸ் போட்டி, 17ம் சிறுசேரியில் நடக்கிறது.
முகமது சாதீக் ஏ.ஜெ., கல்லுாரி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான செஸ் போட்டி, 17ம் தேதி நடத்துகிறது.
போட்டிகள், சிறுசேரி ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன. இதில், 9, 11, 13, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட ஐந்து பிரிவுகளில் தனித்தனியாக நடக்கின்றன. அனைத்து பிரிவிலும் முதல் 15 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்படும்.
'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், 86102 92372 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு செய்தி
--
சென்னை மாவட்ட வாலிபால்
டான்பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
சென்னை, ஆக. 14-
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், மாணவர் பிரிவில், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி அணி, 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி இணைந்து நடத்தி வந்த, சென்னை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தன.
இதில், பெண்களுக்கான இறுதி போட்டியில், புரசைவாக்கம், டி.இ.எல்.சி., மாக்டலீன் பள்ளி மற்றும் வித்யோதயா பள்ளி அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், 25 - 18, 25 - 7 என்ற கணக்கில், டி.இ.எல்.சி., அணி வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், பெரம்பூர், எம்.எச்., சாலை சென்னை அரசு பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில் அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
மாணவருக்கான இறுதிப் போட்டியில், பெரம்பூர் டான்பாஸ்கோ மற்றும் முகப்பேர் வேலம்மாள் அணிகள் மோதின. அதில், 20 - 25, 25 - 23, 25 - 23 என்ற கணக்கில் டான்பாஸ்கோ பள்ளி வெற்றி வெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மாணவருக்கான மூன்றாம் இடம் போட்டியில், மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் அணி, 25 - 23, 16 - 25, 25 - 23 என்ற கணக்கில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., தேவாரம், தொழிலதிபர் ராஜன், இந்திய - இலங்கை மீனவர் பேச்சு வார்த்தை குழுவின் தலைவர் சுரேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.