ADDED : நவ 19, 2025 04:06 AM

மூலக்கொத்தளம்: ராயபுரம் மண்டல அலுவலக வளாகம் பழைய கோப்புகளால், குப்பை கிடங்கு போன்று மாறியுள்ளது.
மூலக்கொத்தளம், பேசின் பாலம் சாலையில், ராயபுரம் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரைத்தளத்தில், இ - சேவை மையம் மற்றும் பிற துறை அறைகளும், முதல் தளத்தில் மண்டல உதவி கமிஷனர் அலுவலகமும், இரண்டாம் தளத்தில், சுகாதார நிலையம், மின்சாரம் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன.
தினமும் ஏராளமான பொதுமக்கள், சான்றிதழ் திருத்தம், ஆதார் சேவை, குடிநீர் இணைப்பு, வீடு கட்டுவதற்கான ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது தளத்தில், உள்ள சுகாதார நிலையம் பிரிவின் அருகே பழைய ஆவணங்கள் ஒருபுறமும், மற்றொரு இடத்தில், அட்டை, பேப்பர் போன்ற குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன.
இதனால், தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி அலுவலகத்திலேயே குப்பை கழிவுகள் குவிந்துள்ள நிலையில், தெருவில் இருக்கும் குப்பையை எப்படி அகற்றுவர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

