/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இஸ்ரோ' தலைவருக்கு அரும்பாக்கத்தில் பாராட்டு
/
'இஸ்ரோ' தலைவருக்கு அரும்பாக்கத்தில் பாராட்டு
ADDED : மார் 17, 2025 03:01 AM

அரும்பாக்கம்:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் நாராயணனுக்கு, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரியில் நேற்று, பாராட்டு விழா நடந்தது.
அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு பொது செயலர் அன்பையா சசிகுமார் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் இயக்குனர், சுவாமி வினய் அமிர்தானந்த புரி ஆசியுரை வழங்கினார்.
இதில், 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் பேசியதாவது:
இஸ்ரோ தலைவராக நான் பொறுப்பேற்ற பின், அனைத்து இஸ்ரோ பணியாளர்களும் சந்தோஷமாக வேலை செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தேன்.
மாட்டு வண்டி மற்றும் பழைய மிதிவண்டியில் பயணித்த இஸ்ரோ தற்போது, 131 செயற்கைக்கோள்களை வடிவமைத்து அனுப்பி உள்ளது. நாம் அனுப்பிய சந்திரயான் - 1 தான், நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை கண்டறிந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இந்திய விண்வெளி துறை பயங்கர வளர்ச்சியடைந்து உள்ளது.
இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் பணி நிறைவடையும். பிரதமர் மோடியும், ஏவுதளம் பணி குறித்து தொடர்ந்து விசாித்து வருகிறார்.
வரும் 2047ல் நிச்சயம், இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். அதில் இந்திய விண்வெளி துறை முக்கிய பங்கு இருக்கும். நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களைவிட, பொருளாதாரத்தில் நம் முன்னேறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், வேலம்மாள் கல்வி குழுமம் தாளாளர் வேல்மோகன், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவா சங்கம் வட தமிழ்நாடு அமைப்பாளர் பிரசோபகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தவிர பி.பி.ஜெயின் அண்டு கோ கணக்காளர் தேவேந்திர குமார், டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி செயலர் அசோக்குமார், ஜெ.ஜெ., பைனான்ஸ் உரிமையாளர் ஜெயக்குமார், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம், சென்னை ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.