ADDED : அக் 29, 2025 02:02 AM
மீனம்பாக்கம்: மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், இருசக்கர வாகனத்தின் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில், ஐ.டி., நிறுவன ஊழியர் தலை நசுங்கி பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், கொளத்துார், லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரிச்சர்ட், 31. மென்பொறியாளர். பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று அதிகாலை பணி முடித்து, டி.வி.எஸ்., ஜூபிட்டர் வாகனத்தில், வீட்டிற்கு 'ஹெல்மெட்' அணிந்து புறப் பட்டார். மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலை புனித வேளாங்கன்னி சர்ச் எதிரே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பின்புறம் ஆலந்துாரில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த மாநகர பேருந்து, ரிச்சர்ட் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரிச்சர்ட் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அவரின் தலையில் பேருந்தின் முன்சக்கரம் ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநரான கொடுங்கையூரைச் சேர்ந்த எட்வர்ட் தம்பி, 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

