ADDED : நவ 23, 2024 12:22 AM
அண்ணா நகர்,அண்ணா நகரைச் சேர்ந்த, ஐ.டி., ஊழியரான 37 வயது பெண், கடந்த ஜூன், 27ம் தேதி, அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரில் கூறியிருந்ததாவது:
எனக்கு 'கஸ்டமர் கேர்' எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மும்பை போலீஸ் என அறிமுகமாகி, என் பெயரில் ஈரானில் இருந்து ஒரு பார்சல் வந்ததாகவும், அதில் போலி பாஸ்போர்ட்கள், போதை பொருள் இருப்பதாகவும் கூறினார்.
என்னை கைது செய்ய உள்ளதாகக் கூறிய அவர், என் கணக்கில் இருந்து பணம் அனுப்பினால், விசாரித்து விட்டு பணத்தை திரும்ப அனுப்பவதாக கூறினார்.
இதை நம்பி இரு தவணையாக மொத்தம் 18.30 லட்சம் ரூபாய் வரை அனுப்பினேன். சில நிமிடத்திற்குப் பின், ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
இவ்வாறு, அதில் கூறியிருந்தார்.
அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்த போது, பணம் அனுப்பிய வங்கி கணக்கு, ஆசாம் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதும், அந்த கணக்கின் மீது, 14 மாநிலங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு நீதிமன்ற உத்தரவின்படி முடக்கப்பட்டது. பலகட்ட விசாரணைக்குப் பின், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து, 18.30 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட ஐ.டி., பெண் ஊழியர் வங்கி கணக்கிற்கு, சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் மீட்டுக் கொடுத்தனர்.