/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இசை ஊற்றை பெருக்கியவர் அம்மா தான்: கங்கை அமரன்
/
இசை ஊற்றை பெருக்கியவர் அம்மா தான்: கங்கை அமரன்
ADDED : ஆக 10, 2025 12:25 AM

சென்னை, ''எனக்கும் இளையராஜாவுக்கும் இசை ஊற்றை பெருக்கியவர் எங்கள் அம்மா தான்,'' என, திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார்.
'பேனாக்கள் பேரவை' நிறுவனர் என்.சி.மோகன்தாஸ், நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, மாதம்தோறும் பிரபல சாதனையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
அந்த வகையில், நுங்கம்பாக்கம் மேயர் சம்பந்தம் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கங்கை அமரன், எழுத்தாளர்கள், கவிஞர்களுடன் பேசியும், பாடியும், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் நிகழ்வை கலகலப்பாக்கினார்.
கங்கை அமரன் பேசியதாவது:
நானும் என் அண்ணணும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளோம். படிப்பறிவு இல்லை என்றாலும் பாடல் அறிவு, இசை அறிவு உண்டு. எங்களின் இசை ஊற்றை பெருக்கியவர், எங்கள் அம்மா.
நாங்கள் எந்த மெட்டு போட்டு பாடினாலும், எங்கோ கேட்டது போல் உள்ளது என்று கூறி முடித்து விடுவார். அவரை திருப்தி செய்து, மகிழ்விக்கவே வேறு வேறு பாடல்கள் உருவாக்கினோம். ஒரு நாள் அது நிறைவேறியது. அப்போது தான் எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
முதன் முதலாக எங்கள் குழு தான் உலகம் சுற்றும் இசைக் குழுவாக இருந்தது. ஒரு சமயம், சுவிட்சர்லாந்தில் எங்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. அதே சமயம், மற்றொரு பகுதியில், நடிகர் ரஜினி பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்டம் வரவில்லை. அவர் என்னை அழைத்து, 'உங்கள் நிகழ்ச்சிக்கு மட்டும் எப்படி மக்கள் கூட்டம் வந்தது' என, கேட்டார். அதற்கு, 'நீங்கள் உங்கள் பள்ளி நிதிக்காக வந்துள்ளீர்கள். நான் பொது நல நிதிக்காக வந்துள்ளேன்' என்றேன்.
வரும் ஜனவரியில் என்னுடைய பாடல்களின் தொகுப்பு வெளியாக உள்ளது. எல்லாரும் பாடல்கள் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சாய் சங்கரா மேட்ரிமோனியல்' பஞ்சாபகேசன், 'இந்தியன் பிரன்ட்லைன் நர்ஸ்' சேவை அமைப்பு மற்றும், மனிதநேய மைய அமைப்பின் சார்பில், மாற்றுத்திறனாளி பெண் யாழினிஸ்ரீக்கு, 'வீல்சேர்' வாங்குவதற்கான நிதி, 60,000 ரூபாய் வழங்கப்பட்டது.