/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்ளத்தில் பொங்கி வழிந்த காதல் வீணை மீட்டி சாத்தியமாக்கிய ஜெயந்தி
/
உள்ளத்தில் பொங்கி வழிந்த காதல் வீணை மீட்டி சாத்தியமாக்கிய ஜெயந்தி
உள்ளத்தில் பொங்கி வழிந்த காதல் வீணை மீட்டி சாத்தியமாக்கிய ஜெயந்தி
உள்ளத்தில் பொங்கி வழிந்த காதல் வீணை மீட்டி சாத்தியமாக்கிய ஜெயந்தி
ADDED : டிச 17, 2024 12:08 AM

கணபதியை வாழ்த்தி, வீணையை மீட்ட துவக்கினார், பிரபல வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ். நிசப்தத்தை அறுத்த ஸ்வரம், அதிர்வு காட்டாமல் மெல்லமாய் கச்சேரியை துவக்கியது.
ஊர்மிகா ராகம், ஆதி தாளத்தில் முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைக்கு ஸ்வரம் வாசித்தார் ஜெயந்தி. இதன் துவக்கமே, ரசிகர்களின் ஆழ்மனதை ஆடாது வைத்திருந்தது. தன் விரலால் மீட்டிய இசையை, அனைவரது மனதையும் வருடுவது போல் பிரமிப்பு அமைந்திருந்தது.
இது முடிவதற்குள், அடுத்து காத்திருந்தது மற்றொரு பிரமிப்பு. தியாகராஜரின் கீர்த்தனையை மோஹன ராகத்தில் இசைத்தபோது, நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணரவே, சில நிமிடங்கள் கடந்தது. அப்படியொரு பக்தி இசை அது. காதில் ராகம் சேர சேர ஏகாந்தமாக இருந்தது.
பின், வழக்கமான சதுஸ்ர நடை, ஆதி தாளம் மட்டுமின்றி கண்ட நடை, ரூபக தாளத்தில் இசைத்து, தம் இசை பிரவாகத்தில் ரசிகர்களை சேர்த்து, கைப்பிடித்து அழைத்து சென்றதுபோல் இருந்தது. ரசிகர்களும் அதையே மெய்ப்பித்தனர்.
தொடர்ந்து, மிருதங்க வித்வான் ஜெயச்சந்திர ராவ், கடம் வித்வான் திருச்சி கிருஷ்ணமூர்த்தியின் தாளங்கள் விளையாடின. தனி ஆவர்த்தனத்தில், கச்சேரியில் தங்களுக்கும் பங்குண்டு என நிரூபித்தனர்.
பின், 'கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி' எனும் பாடலுக்கு வீணை வாசிக்கும்போது, ரசிகர்களின் கண்களிலும், உள்ளத்திலும், உண்மையாகவே காதல் பொங்கிற்று.
அதே காதல், வீணை தலைவி ஜெயந்தி குமரேஷ் கண்களிலும் மிளிர்ந்தது. இந்த நிகழ்வு அரங்கையே ஒளிரச்செய்வது போல் அமைந்தது சுவாரஸ்யம்.
இறுதியாக, மத்யமாவதியில் 'ஸ்ரீ காமாட்சி லோக சாட்சி' மங்களம் இசைத்து, கமாஸ் தில்லானாவில் நிறைவு செய்தார். ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலை நாரத கான சபாவில் நடந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து, இசை கலைஞர்களுக்கு தங்கள் மகிழ்ச்சியை பரிசளித்தனர்.
- நமது நிருபர் -