/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விடுதி கட்ட தடை கோரிய மாணவரின் மனு தள்ளுபடி அபராதத்துடன் 'அட்வைஸ்' வழங்கிய நீதிபதிகள்

ADDED : அக் 24, 2025 01:48 AM
சென்னை: சென்னை பல்கலை வளாகத்தில் விடுதி கட்டும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலையில், பொது நிர்வாகவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில், 'சென்னை பல்கலை, ராமானுஜன் மேம்பட்ட கணிதவியல் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவியருக்கான விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
' இதற்கு தடை விதிக்க வேண்டும். ராமானுஜன் மேம்பட்ட கணிதவியல் கல்வி நிறுவன வளாகத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும். விடுதி கட்டுமான பணியால், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விடுதி கட்டும் பணியை கைவிடும்படி அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என, குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இதுபோல தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்வதை கைவிட்டு, வழக்கு தொடர்ந்த சம்பந்தப்பட்ட மனுதாரர் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி, 10,000 ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.