/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜூனியர் மகளிர் கால்பந்து: தமிழக அணி அசத்தல்
/
ஜூனியர் மகளிர் கால்பந்து: தமிழக அணி அசத்தல்
ADDED : நவ 21, 2025 04:08 AM
சென்னை: ஆந்திர மாநிலத்தில் நடந்துவரும் தேசிய மகளிர் ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழக அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், வெற்றியை பதிவு செய்துள்ளது.
அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் ஆந்திர மாநில கால்பந்து சங்கம் இணைந்து, மகளிருக்கான தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் டையர் - 1 போட்டியை, ஆந்திரா, அனந்தபூரில் உள்ள ஆர்.டி.டி., மைதானத்தில் நடத்துகின்றன.
இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் 'ஏ' பிரிவில் ஆந்திரா, ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் அணிகளுடன் தமிழக அணியும் இடம்பெற்றுள்ளது.
தமிழக அணி, தன் முதல் போட்டியில் 12 கோல்கள் எடுத்து, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தை, ராஜஸ்தானுக்கு எதிராக நேற்று விளையாடியது.
இதில் 40வது நிமிடத்தில் தமிழக அணியின் தர்ஷினி, அணிக்காக முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் தமிழக அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி துவங்கி 50வது நிமிடத்தில், அன்விதா ரகுராமன் ஒரு கோல் அடித்தார்.
எதிரணிக்கு எந்த கோல் வாய்ப்பும் வழங்காமல், தமிழக அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், அபார வெற்றியை பதிவு செய்தது.

