/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல குழு கூட்டத்தில் காரசாரம் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் வாக்குவாதம்
/
மண்டல குழு கூட்டத்தில் காரசாரம் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் வாக்குவாதம்
மண்டல குழு கூட்டத்தில் காரசாரம் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் வாக்குவாதம்
மண்டல குழு கூட்டத்தில் காரசாரம் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் வாக்குவாதம்
ADDED : நவ 21, 2024 12:35 AM
வளசரவாக்கம், மளிகை பொருட்களை திருடிய ராமாபுரம் 'அம்மா' உணவக பெண் ஊழியர் பிடிபட்டது தொடர்பான பிரச்னையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் இதை விட அதிகமாக திருடினர்' என, தி.மு.க., கவுன்சிலர் குற்றம்சாட்டினார். இதனால், அ.தி.மு.க., -- தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மண்டல உதவி கமிஷனர் உமாபதி, செயற்பொறியாளர்கள் பானுகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, 20 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஸ்டாலின், தி.மு.க., 144வது வார்டு: மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க, இரு ஆண்டுகளாக பேசி வருகிறேன். அங்கு மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமணி மாதவன், தி.மு.க., 147வது வார்டு: ஆலப்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டட பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. பல மாதங்கள் கடந்தும், இன்னும் கடைக்கால் பணிகளை கூட முடிக்கவில்லை.
பாரதி, தி.மு.க., 152வது வார்டு: அ.தி.மு.க., சார்பில் மண்டல அலுவலகம் அருகே கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது, 'அ.தி.மு.க., ஆட்சியின் போது அம்மா உணவகத்தில் உணவு ருசி அருமையாக இருந்தது. தி.மு.க., ஆட்சியில் கேவலமாக உள்ளது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேசினார். அம்மா உணவகத்தில் உள்ள பொருட்களை அங்கு பணி செய்யும் நபர்கள் திருடி சென்றால், எப்படி ருசி இருக்கும். என் வார்டில் பொருட்கள் எடுத்து செல்லும் ஊழியர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ராஜி, தி.மு.க., 155வது வார்டு: ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணி செய்த தலைவி பிரியா என்பவர், பொருட்களை கையாடல் செய்ததாக, சுகாதார துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி, அதே அம்மா உணவகத்தில் தலைவி பிரியா துணையுடன், துணை தலைவி விஜயா என்பவர், தன் மகனிடம் மளிகை பொருட்களை கொடுத்து அனுப்பினார். அப்போது அப்பகுதியினர் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால், குற்றம் செய்த தலைவியும், துணை தலைவியும், அம்மா உணவகத்தில் தற்போதும் அமர்ந்துள்ளனர்.
அம்மா உணவகத்தில் பணி செய்வோர், அ.தி.மு.க., ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் அ.தி.மு.க., அனுதாபிகள். தற்போது, தி.மு.க., ஆட்சியில் பொருட்களை கொள்ளை அடிக்கும் இவர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் இதைவிட அதிகமாக பொருட்களை திருடியிருக்கலாம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்யநாதன், ''பொருட்கள் திருடிய நபரை, நீங்கள் குற்றம்சாட்டுவதில் தவறில்லை. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியிலும் சுதந்திரமாக திருடியிருப்பார்கள் என, எவ்வாறு ஆதாரம் இன்றி பேசுகிறீர்கள்,'' என, கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே 10 நிமிடங்களுக்கு மேல் கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், மண்டல குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.