/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார்த்திகை பிறந்தது; மீன்விலை குறைந்தது
/
கார்த்திகை பிறந்தது; மீன்விலை குறைந்தது
ADDED : நவ 18, 2024 02:44 AM

காசிமேடு:கார்த்திகை மாதம் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த மாதத்தில், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்த்து, சபரிமலை செல்லும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பர். இதனால், மீன்களின் விலை குறையும் என, அசைவ பிரியர்கள் எதிர்பார்த்தனர்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தீபாவளி முடிந்தபின், அதிக படகுகள் மீன்பிடிக்க சென்ற நிலையில், நேற்று 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.
இந்நிலையில், 50 படகுகள் நிற்கும் இடத்தில், 100க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டதால், மீனை இறக்க இடம் இல்லாமல், கடும் இடநெருக்கடி காணப்பட்டது. மீனை எடுத்து செல்ல வந்த சைக்கிள் ரிக் ஷாக்களை நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஒவ்வொரு படகிலும், பாதியளவு மீன்கள் விற்கப்பட்ட நிலையில், பாதி மீன்கள் தேங்கின. மேலும், 50க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களை இறக்கவே இல்லை. பாறை, கனாகத்த உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தது.
மீன் வரத்து அதிகரிப்பால், மீன்விலை மிகவும் குறைந்தது. கடந்த வாரத்தைவிட அனைத்தும் மீன்களின் விலையும், கிலோவுக்கு, 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாய் வரை விலை குறைந்தது.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 850 - 1,000
கறுப்பு வவ்வால் 400 - 450
பாறை - 150 - 200
சங்கரா 300 - 350
சீலா 300 - 400
நெத்திலி 200 - 250
கடம்பா 300 - 400
வாலை 100
நவர 100 - 150
கிளிச்ச 50 - 100
கனாகத்த 150 - 200
நண்டு 200 - 300
இறால் 300 - 400