/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணன் போல ஆள்மாறாட்டம் செய்து பித்தலாட்டம் போலீஸ், நீதிமன்றங்களை ஏமாற்றிய கேடி தம்பி கைது
/
அண்ணன் போல ஆள்மாறாட்டம் செய்து பித்தலாட்டம் போலீஸ், நீதிமன்றங்களை ஏமாற்றிய கேடி தம்பி கைது
அண்ணன் போல ஆள்மாறாட்டம் செய்து பித்தலாட்டம் போலீஸ், நீதிமன்றங்களை ஏமாற்றிய கேடி தம்பி கைது
அண்ணன் போல ஆள்மாறாட்டம் செய்து பித்தலாட்டம் போலீஸ், நீதிமன்றங்களை ஏமாற்றிய கேடி தம்பி கைது
ADDED : டிச 03, 2024 09:56 PM

சென்னை:அண்ணனை போல ஆள்மாறாட்டம் செய்து, கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று, தண்டனையும் பெற்று, காவல் துறை, நீதிமன்றங்கள் மற்றும் மனைவியை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பழனி, 59. இவருக்கு ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள். சகோதரரின் பெயர் பன்னீர்செல்வம், 62.
இளம் வயதில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த பழனி, அண்ணன் பெயரில் இருந்த பள்ளி சான்றிதழ்களை கொடுத்து, 'நான் தான் பன்னீர்செல்வம்' என, தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தார்.
பின், லுார்து மேரி என்பவரை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரு மகன்கள். மனைவியிடமும், தன் பெயர் பன்னீர்செல்வம் என்றும், செல்லமாக பழனி என, அழைப்பர் என்றும் கூறியுள்ளார். லுார்து மேரியும் அதை நம்பியிருந்தார்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பழனி, லுார்து மேரியையும், ஐந்தரை வயதான மூத்த மகனையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
இதுகுறித்து, தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் லுார்து மேரி 2009ல் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பன்னீர்செல்வம் என்ற பெயரில் உலவிய பழனியை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.
'பிடிவாரன்ட்'
அப்போதும், காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் என்றே, பழனியின் பெயர் பதிவாகி இருந்தது.
இந்த வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றம் 2018ல், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தண்டனையை குறைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனையை மூன்றாண்டாக குறைத்து உத்தரவிட்டது.
அதையும் எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றம் சென்றார். மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, உடனடியாக மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
ஆனால், பன்னீர்செல்வம் பெயரில் இருந்த பழனி தலைமறைவானார். அவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கோடம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பன்னீர்செல்வம் பெயரில், ஒருவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அந்த பன்னீர்செல்வத்தை, கடந்த ஜூன் மாதம் காஞ்சிபுரத்தில் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
அப்போது பன்னீர்செல்வம், 'நான் அவர் இல்லை. கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறை சென்று, ஜாமினில் வெளிவந்தவர் என் சகோதரர் பழனி.
என் பெயரை பயன்படுத்தி, ஆள்மாறாட்டம் செய்து, அவரின் மனைவி லுார்து மேரி, காவல் துறை மற்றும் நீதிமன்றத்தை ஏமாற்றி உள்ளார்' என்று கூறியுள்ளார்.
தனிப்படை
இதையடுத்து, மகளிர் நீதிமன்றத்தில் லுார்து மேரி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நடந்த விசாரணையில், 'இவர் என் கணவர் இல்லை. என்னையும், குழந்தையையும் அடித்து சித்ரவதை செய்தது வேறு நபர்' என்று, லுார்து மேரி தெரிவித்துள்ளார். அதன்பின்னரே, அண்ணன் பெயரில் பழனி பித்தலாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் ஐந்து மாதங்களாக பழனியை தேடி வந்தனர்.
அவர், கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருவதும், வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, பழனியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.