/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையில் கரைந்த கிருபானந்த வாரியார் அரிய நுால்கள்
/
மழையில் கரைந்த கிருபானந்த வாரியார் அரிய நுால்கள்
ADDED : ஜன 05, 2024 01:02 AM

முருக பக்தரும், சமய சொற்பொழிவாளருமான கிருபானந்த வாரியார், திருப்புகழ் விரிவுரை என்ற பெயரில் ஒன்பது தொகுதி நுால்களை எழுதினார்.
பெரியபுராணம், கந்த புராணம், திருப்புகழ் விரிவுரை, மகாபாரதம், ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் உள்ளிட்ட நுால்களை எழுதி உள்ளார். இவை அனைத்தும் சென்னை, வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த வாரியார் பதிப்பகம், சென்னை சிந்தாதரிப்பேட்டை, சிங்கண்ண தெருவில் உள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையின் போது, இந்த பதிப்பகத்தினுள் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.
இந்த புத்தகக்காட்சிக்காக மறுபதிப்பு செய்யப்பட்டு, பண்டல்களாக கட்டப்பட்டிருந்த வாரியார் சுவாமிகளின் நுால்கள் அனைத்தும் வெள்ளநீரில் நனைந்து வீணாயின. அதுமட்டுமின்றி, நுால்களுக்கான 'நெகட்டிவ் பிலிம்'கள் அனைத்தும், மழையில் ஊறி பாழாகின.
திருப்புகழ் விளக்கவுரை, மகாபாரதம் உள்ளிட்ட அனைத்து நுால்களையும் மறுபடி புதிதாக தட்டச்சு செய்து பதிப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கிருபானந்த வாரியாரின் புகைப்பட நெகட்டிவ்களும் மழையில் நனைந்து வீணாகி உள்ளன. இதனால், இந்த காட்சியில் இப்புத்தகங்களை வாங்கும் வாய்ப்பை ஆர்வலர்கள் இழந்துள்ளனர்.
--- நமது நிருபர் --