/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறல் கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு தரக்கூடாது கோடம்பாக்கம் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
/
விதிமீறல் கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு தரக்கூடாது கோடம்பாக்கம் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
விதிமீறல் கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு தரக்கூடாது கோடம்பாக்கம் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
விதிமீறல் கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு தரக்கூடாது கோடம்பாக்கம் கவுன்சிலர்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 17, 2025 01:15 AM
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட 29 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.
மேலும், 'விதிகளை மீறி கட்டும் கட்டடங்களை முறையாக ஆய்வு செய்து, வரி விதிக்க வேண்டும்; விதிமீறல் கட்டடங்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்க கூடாது' என, கவுன்சிலர் விவாதித்தனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
சுப்ரமணியன், 139வது வார்டு, ம.தி.மு.க.: என் வார்டில் கங்கையம்மன் கோவில் தெருவில், ஆண்கள் உடற்பயிற்சி கூடம் கட்ட, கவுன்சிலர் நிதியில், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்பந்தம் இன்னும் கோரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, 128வது வார்டு, தி.மு.க.: விருகம்பாக்கம் தாங்கல் தெருவில், பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளம் விழுந்தது. குடிநீர் வாரியம் சார்பில் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
விருகம்பாக்கத்தில் உள்ள சமூதாய நலக்கூடத்தை பராமரிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஏழுமலை, 133வது வார்டு, தி.மு.க.: தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சடலங்களை எடுத்து வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு குவிக்கப்பட்ட குப்பையை அகற்ற வேண்டும்.
இன்னும் ஓராண்டில், சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளோம். மறுபடியும் தி.மு.க., ஆட்சி அமைக்க, நம் பணிகளை சீராக செய்ய வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
யாழினி, 135வது வார்டு, வி.சி.க.: அசோக் நகர் 11வது அவென்யூவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம்., சுடுகாட்டின் சுற்றுச்சுவர் சரிந்து விழும் நிலையில் உள்ளது. அதை சீர் செய்ய வேண்டும்.
பாஸ்கர், 130வது வார்டு, தி.மு.க.: வடபழனி கங்கையம்மன் கோவில் தெரு, பெரியார் பாதை அருகே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்க வேண்டியுள்ளது. அங்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் தேங்கி விடுகிறது.
மேலும், சாலைகள் பல குண்டும் குழியுமாக மாறி உள்ளன. அவற்றில் சாலை ஒட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீதர், 140வது வார்டு, தி.மு.க.: என் வார்டில் கடந்த ஆண்டு ஆக., மாதம் முதல் இதுவரை 26 பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் ஒரு பணிக்கு கூட இன்னும் ஒப்பந்தம் கோரப்படவில்லை.
பன்னீர்செல்வம் நகரில் சமூகநலக்கூடம் அமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்க முடியாததால், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. பெண்கள் உடற்பயிற்சி கூடம் திறந்து 15 மாதங்கள் ஆகின. அதற்கு இன்னும் பெண்பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.