பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிப்பதாக கிருத்திகா தேவி உறுதி
பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிப்பதாக கிருத்திகா தேவி உறுதி
ADDED : ஏப் 17, 2026 10:17 PM

தாம்பரம்: ''செம்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும்,'' என தி.மு.க., வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி வாக்குறுதி அளித்தார்.
தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி, கூட்டணி கட்சியினருடன் இணைந்து, தொகுதி முழுதும் பிரசாரம் செய்து வருகிறார். கிழக்கு தாம்பரம் மற்றும் செம்பாக்கம் பகுதிகளில் நேற்று, ஓட்டு சேகரித்தார்.
அப்போது, டாக்டர் கிருத்திகா தேவி கூறியதாவது:
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, செம்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன்.
செம்பாக்கம் முழுதும் தடையின்றி மெட்ரோ குடிநீர் வினியோகம் உறுதி செய்யப்படும். இங்குள்ள பூங்காக்களுக்கு, 'டெண்டர்' விட்டு, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். பயன்பாடற்ற நிலையில் உள்ள சமூக நலக்கூடத்தை நவீன வசதிகளுடன் புதுப்பித்து, ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பிரசாரத்தின் போது, தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, மேயர் வசந்தகுமாரி, மண்டல தலைவர் இந்திரன், செம்பாக்கம் பகுதி செயலர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
