/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வாட்டர் மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14 கோடி நீர்வளத்துறையிடம் கேட்கிறது 'கும்டா'
/
'வாட்டர் மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14 கோடி நீர்வளத்துறையிடம் கேட்கிறது 'கும்டா'
'வாட்டர் மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14 கோடி நீர்வளத்துறையிடம் கேட்கிறது 'கும்டா'
'வாட்டர் மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14 கோடி நீர்வளத்துறையிடம் கேட்கிறது 'கும்டா'
ADDED : டிச 04, 2025 01:53 AM
சென்னை: சென்னையில், நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் வரை 'வாட்டர் மெட்ரோ' சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 14 கோடி ரூபாய் கேட்டு, போக்குவரத்து குழுமமான கும்டா, நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் தற்போது, மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை பெருநகர் பகுதிக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்திட்டத்தை கும்டா உருவாக்கி உள்ளது. சென்னை பெருநகரில், 2,048 வரையிலான காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், இதில் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
இதில் புதிய முயற்சியாக, பகிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' சேவையை துவங்கலாம் என கும்டா பரிந்துரைத்துள்ளது.
தலைமை செயலர் தலைமையில் அக்., மாதம் நடத்த உயரதிகாரிகள் கூட்டத்தில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்னை நேப்பியர் பாலம் முதல், மாமல்லபுரம் வரை, 55 கி.மீ., தொலைவுக்கு வாட்டர் மெட்ரோ சேவையை துவங்குவதற்கான பூர்வாக பணிகளை கும்டா துவக்கி உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 14 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இத்தொகையை வழங்குமாறு, கும்டா அதிகாரிகள், நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
மேம்பாலம் 'அம்போ' சென்னையில் சர்தார் படேல் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை சந்திக்கும் இடம் மத்திய கைலாஷ் என்று குறிப்பிடப்படுகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சர்தார் படேல் சாலையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் தான், பழைய மாமல்லபுரம் சாலைக்கு செல்ல முடியும்.
இங்கு அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதிக வாகனங்கள் செல்வதால், பழைய மாமல்லபுரம் சாலைக்கு வாகனங்கள் காத்திருந்து திரும்ப வேண்டும். இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்காக இங்கு, 'எல்' வடிவ மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நெடுஞ்சாலை துறை வாயிலாக இங்கு, 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கும் முன், இங்கிருந்த நடைமேம்பாலம் அகற்றப்பட்டது.
வாகன மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின், நடைமேம்பாலம் கட்டப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க, 'கும்டா'விடம் நெடுஞ்சாலைத்துறை கேட்டிருந்தது. இதன்படி முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல்கள் அடிப்படையில் இங்கு நடைமேம்பாலம் கட்டுவது சாத்தியமில்லை என, கும்டா, நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவித்துள்ளது.
இங்கு, சர்தார் படேல் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பு குறித்த முழுமையான நில அளவை வரைபடங்கள் கிடைத்தால் அதன் அடிப்படையில் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கலாம் என, கும்டா தெரிவித்துள்ளது.
இதனால், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான நடை மேம்பாலம் வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

