/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குத்தம்பாக்கம் பஸ் நிலைய திட்ட மதிப்பு உயர்வு...ரூ.427 கோடி! :கூடுதல் வசதிகளுடன் மே மாதம் திறக்க திட்டம்
/
குத்தம்பாக்கம் பஸ் நிலைய திட்ட மதிப்பு உயர்வு...ரூ.427 கோடி! :கூடுதல் வசதிகளுடன் மே மாதம் திறக்க திட்டம்
குத்தம்பாக்கம் பஸ் நிலைய திட்ட மதிப்பு உயர்வு...ரூ.427 கோடி! :கூடுதல் வசதிகளுடன் மே மாதம் திறக்க திட்டம்
குத்தம்பாக்கம் பஸ் நிலைய திட்ட மதிப்பு உயர்வு...ரூ.427 கோடி! :கூடுதல் வசதிகளுடன் மே மாதம் திறக்க திட்டம்
UPDATED : பிப் 10, 2025 02:57 AM
ADDED : பிப் 09, 2025 09:33 PM

திருமழிசை:திருமழிசை குத்தம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அவற்றின் திட்ட மதிப்பு, 336 கோடி ரூபாயில் இருந்து, 427 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பணிகளை விரைந்து முடித்து, மே மாத இறுதியில் பேருந்து நிலையத்தை திறக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மாதவரம், வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மாதவரம் பேருந்து நிலையம் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்த நிலையில், கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கரில், 400 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், 2023 டிச., 30ல் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதையடுத்து, பூந்தமல்லியை அடுத்த திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்காக குத்தம்பாக்கம் கிராமத்தில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.
இங்கு, 336 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், 2021ல் துவங்கின. இதன்படி, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், இப்புதிய பேருந்து நிலையம் அமையும் என கூறப்பட்டது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திட்ட மதிப்பு திருத்தம்
ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வடிவமைப்பு அடிப்படையில், இங்கு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், பேருந்து முனைய பிரதான கட்டடத்தில், கூடுதலாக ஒரு தளம் குளிர் சாதன வசதியுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் தளத்துடன், 2 கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டு பணிகள், 10 கோடி ரூபாயில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதை கருத்தில் வைத்து, பேருந்து நிலைய திட்ட மதிப்பு, 427 கோடி ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது.
எப்போது திறப்பு?
ஏற்கனவே, 2024 இறுதியில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடியாத நிலையில், 2025 மார்ச்சில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
தற்போதைய நிலவரப்படி, அடிப்படை கட்டுமான பணிகள், 92 சதவீதம் முடிந்துள்ளது, இதர பணிகள் இன்னும் முடியாத நிலையில், மே மாத இறுதியில் தான் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு இருக்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் உஷார்
இந்த புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு பேருந்துகள் இயக்குவது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றுடன், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
இங்கிருந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, 150 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்தும், மாநகர் போக்குவரத்து கழகம் செயல்திட்டம் தயாரித்துள்ளது. கர்நாடக போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்து நிறுவனங்களுடனும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது, ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உஷாராகி உள்ளனர். இதனால், தொடர்பு பேருந்து வசதி உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்த பின், புதிய பேருந்து நிலையத்தை, மே மாதம் திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.+