/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
l அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க...ரூ.28 கோடி லஞ்சம்; l மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
/
l அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க...ரூ.28 கோடி லஞ்சம்; l மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
l அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க...ரூ.28 கோடி லஞ்சம்; l மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
l அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க...ரூ.28 கோடி லஞ்சம்; l மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
ADDED : செப் 22, 2024 07:47 AM
சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்க, 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் உட்பட, 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம். இவர், 2011 மே 16 முதல் 2016 மார்ச் 31 காலக்கட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 2013ல் சென்னை பெருங்களத்துாரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்திருந்தது. திட்ட அனுமதி வழங்குவதற்கு, அத்துறையின் அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்திற்கு, 2016ல், பெரும் தொகை வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெருங்களத்துாரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான, ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கர் பரப்பளவில், 24 பிளாக்குகளாக, 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்களுக்கான கட்டடங்களை கட்டுவதற்கு, திட்ட அனுமதி கேட்டு, 2013ல் விண்ணப்பித்தது.
இதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு, 2016ல் திடீரென அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, வைத்திலிங்கத்திற்கு, 27.90 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டு உள்ளது.
லஞ்சப்பணம், பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனம் வாயிலாக, வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு ஆகியோர் இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு, 2016 ஜனவரி, 28 முதல் பிப்., 4ம் தேதி வரை கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
லஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள், திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில், 23 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளனர்.
இதேபோல, லஞ்ச பணத்தில் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியதில், லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் மற்றொரு இயக்குனர் பன்னீர்செல்வம், ஸ்ரீராம் நிறுவன இயக்குனர் ரமேஷ், பாரத் கோல் கெமிக்கல், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ், அபிநயா புராஜக்ட் இன்ஜினியரிங், சாஸ்வதா ரீனுவபிள் எனர்ஜி, வினியோகா டிஸ்ட்ரிபியூஷன் சர்வீசஸ் நிறுவனம் உள்பட, 11 பேர் மீது, கடந்த 19ல், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதே புகாரில், தன் பதவியை தவறாக பயன்படுத்தி, கட்டட திட்டத்திற்கு அனுமதி அளித்ததாக, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.