/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமுடிவாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: சிறு தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் அவதி
/
திருமுடிவாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: சிறு தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் அவதி
திருமுடிவாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: சிறு தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் அவதி
திருமுடிவாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: சிறு தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் அவதி
UPDATED : டிச 22, 2025 06:10 AM
ADDED : டிச 22, 2025 05:07 AM

குன்றத்துார்: திருமுடிவாக்கத்தில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால், அங்குள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை புறநகரில், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், திருமுடிவாக்கம் ஊராட்சியில், 241 ஏக்கர் பரப்பளவில், சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது.
இங்கு, 466 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருமுடிவாக்கம் ஊராட்சி முழுதும், 200க்கும் மேற்பட்ட சிறு கிடங்குகள் அமைந்துள்ளன.
இதன் மூலம், ஊராட்சிக்கு தொழில் வரி, சொத்து வரி என, வருவாய் கிடைக்கிறது. ஆனால், ஊராட்சியில் போதிய வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருமுடிவாக்கத்தில், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. முறையாக கழிவு நீர் வடிகால்வாய் இல்லாததால், சிட்கோ தொழிற்பேட்டை பகுதி மற்றும் ஊராட்சியில் காலியாக உள்ள இடங்களில், மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திருமுடிவாக்கம் வழியே அடையாறு ஆற்றுக்கு செல்லும் கால்வாயில், ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மேலும், கழிவு நீர் அகற்றும் லாரிகள் மூலம், வீடுகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீர், திருமுடிவாக்கம் வசந்தம் நகர் கால்வாயில் கொட்டப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் திருமுடிவாக்கத்தில் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, திமுடிவாக்கத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

