/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில வகை அறியும் சேவை சி.எம்.டி.ஏ.,வில் முடக்கம்
/
நில வகை அறியும் சேவை சி.எம்.டி.ஏ.,வில் முடக்கம்
ADDED : ஆக 14, 2025 11:44 PM
சென்னை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இணையதளத்தில், நில வகைப்பாடு விபரங்களை பொதுமக்கள் பார்க்கும் வசதி, மூன்று மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது.
சென்னை பெருநகரில் இரண்டாவது முழுமை திட்டம் தயாரிக்கும்போது, சர்வே எண் வாரியாக, நிலங்களின் வகைப்பாடு விபரங்கள் தொகுக்கப்பட்டன.
இந்த தகவல்கள் வரைபட வடிவில், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
புதிதாக வீடு, நிறுவன கட்டுமானங்களை மேற்கொள்வோர், தங்கள் நிலம், அதற்கு ஏற்றதா என்பதை அறிய, இந்த வசதியை பயன்படுத்தி வந்தனர்.
சி.எம்.டி.ஏ., தயாரித்த வரைபடங்களை பார்ப்பது, சர்வே எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து, செயற்கை கோள் வரைபட பின்னணியில் நில வகைபாடு அறிவது என, இரண்டு வகை வசதிகள் இருந்தன.
கடந்த மூன்று மாதங்களாக, இந்த வசதிகள் செயல்படாமல் முடங்கியுள்ளன. சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இந்த விபரங்களை தேடினால், பராமரிப்பு பணி நடப்பதாக, திரையில் தகவல் வருகிறது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
நில வகைபாடு விபரம் அறிந்தால் மட்டுமே, கட்டுமான திட்ட பணிகளை துவக்க முடியும். இரண்டாம் முழுமை திட்ட தவறுகளால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலமாக காட்டப்படுகின்றன.
இந்த விபரங்கள் தெளிவாக தெரிய வேண்டுமானால், சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு அறிய வேண்டும். அதற்கான சேவை முடங்கியுள்ள நிலையில், மக்கள் அவதிபடுகின்றனர்.
நேரடியாக, சி.எம்.டி.ஏ., அலுவலகத்துக்கு சென்றால், கலந்தாலோசனை பிரிவில் வரைபடங்களை காட்டி விளக்குகின்றனர்.
இதற்கான அனைவரும் நேரில் செல்ல முடியாது என்பதால், ஆன்லைன் வசதியை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***