ADDED : டிச 31, 2024 12:55 AM

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில், மயிலாப்பூரில் நடந்த நாட்டிய விழாவில், லாவண்யா ராஜகோபாலனின் கச்சேரி நடந்தது. முதலில், மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கொள்வது பற்றி, தோழியிடம் ஆண்டாள் உரைப்பதை, நாட்டியத்தில் எடுத்துரைத்தார்.
'துாக்கத்தில் கும்பகர்ணனையே மிஞ்சுவிடுவாய் போலவே தோழி. அதிகாலையில் எழுந்து நாராயணனை போற்றினால், நமக்கு எத்தனை எத்தனை நற்பயன் கிடைக்கும்' என்பதை, தோடி ராகம் 'நோற்று சுவர்க்கம்' பாடல் வரிக்கு ஏற்ப, அபிநயத்தில் அழகாய் விளக்கினார்.
அடுத்ததாக, தலைவியை தவிர்த்து வேறு பெண்ணிடம் உறவாடும் தலைவனின் திருட்டுத்தனத்தை பற்றி, 'உசேலினி ராக ஏமந்தையானரா' எனும் ஸ்வரஜ்தி துவங்கியது.
அட்டமியுடன் துவங்கிய பூர்வாங்கம், பக்குவமான ஜதிகளாலும், சாஹித்யத்துடன் கலந்த அரிதிகளாலும் அழகூட்டப்பட்டிருந்தது.
பின், மீரா பஜன் அமைந்திருந்தது. கண்ணன் மீதான காதல் பக்தியை மீரா வெளிக்கொணர்வதாக, இது அமைந்திருந்தது. அரசவையில் திரவுபதி அவமானத்திற்கு ஆளாகும்போது வஸ்தரம் கொடுத்து கண்ணன் காத்தது, பக்தனான யானைக்கு முதலையின் பிடியில் இருந்து விமோசனம் வழங்கியது உள்ளிட்ட நிகழ்வை, சஞ்சாரியாக நிகழ்த்தி, கச்சேரியை முடித்தார்.
- மா.அன்புக்கரசி