ADDED : பிப் 02, 2024 12:20 AM
சென்னை, திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் நவீன், 28; ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்பகை இருந்து வந்தது.
இந்நிலையில், நவீன், அதே பகுதியில் உள்ள தன் நண்பர் வீட்டில், 2021 ஏப்., 23ல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல், நவீனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த நவீன், மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, நவீனின் சகோதரர் வினோத் அளித்த புகாரின்படி, பழனி, 49, பிரகாஷ், 28, மற்றும் கார்த்திக், 28, ஆகியோரை ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, 17வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன் விசாரணைக்கு வந்தது.
வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
கார்த்திக், பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பழனி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

