/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சதுப்பு நிலத்தில் தடை தொடர்வதால் உள்ளாட்சிகளுக்கு...நெருக்கடி! பணத்தை திரும்ப கேட்கும் கட்டுமான நிறுவனங்கள்
/
சதுப்பு நிலத்தில் தடை தொடர்வதால் உள்ளாட்சிகளுக்கு...நெருக்கடி! பணத்தை திரும்ப கேட்கும் கட்டுமான நிறுவனங்கள்
சதுப்பு நிலத்தில் தடை தொடர்வதால் உள்ளாட்சிகளுக்கு...நெருக்கடி! பணத்தை திரும்ப கேட்கும் கட்டுமான நிறுவனங்கள்
சதுப்பு நிலத்தில் தடை தொடர்வதால் உள்ளாட்சிகளுக்கு...நெருக்கடி! பணத்தை திரும்ப கேட்கும் கட்டுமான நிறுவனங்கள்
ADDED : ஜன 30, 2026 05:02 AM

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி, 1 கி.மீ., துாரத்தில் கட்டடம் கட்ட அனுமதி வழங்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதால், ஏற்கனவே கட்டட அனுமதிக்காக, பல லட்சம் ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு உள்ளாட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 'ராம்சார்' பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அதாவது, பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எல்லை வரையறை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கட்டுமான அனுமதி தொடர்பான வழக்கில், ராம்சார் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சதுப்பு நிலத்தை ஒட்டி, 1 கி.மீ., துாரத்தில் கட்டுமான பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ.,வும், மாநகராட்சியும் தடை விதித்துள்ளன.
இதன்படி, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, ஈஞ்சம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், அரசன்கழனி, மேடவாக்கம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட, 16 வருவாய் கிராமங்களில் உள்ள, 1,300 சர்வே எண்களில் கட்டடம் கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை, கடந்த நவம்பரில் அமலுக்கு வந்தது. அதற்கு முன் கட்டுமான பணிகளுக்கு அனுமதி கேட்டு, சி.எம்.டி.ஏ., - மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
கட்டுமான தடை, முதலில் டிச., 2 வரை இருந்தது. அதன்பின், அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், தடை நீட்டிப்பு தொடர்வதால், அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை அனுமதி கிடைக்காத நிலை உள்ளது.
இதனால், விண்ணப்பிக்கும்போது கட்டுமானத்திற்கு ஏற்ப, 1 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி உள்ளனர். கோடிக்கணக்கான பணம் முடங்கி இருப்பதால், அதை திருப்பி கேட்டு, பலர் கடிதம் கொடுத்துள்ளனர்.
மீண்டும் விண்ணப்பம்
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அரசு இறுதி முடிவு எடுக்காததால், விண்ணப்பித்த பலர் பணத்தை திருப்பி கேட்டு கடிதம் வழங்கியுள்ளனர். இதை அடிப்படையாக கொண்டு, நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து உரிய உத்தரவு வந்தபின், பணம் திருப்பி வழங்கப்படும். தடை நீங்கி அனுமதி வழங்க அரசாணை வந்தால், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'பணத்தை திருப்பித் தருமாறு, கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை வரவில்லை. ஆனால், பணி முடிந்த நிலையில் உள்ள கட்டடங்களுக்கான பணி நிறைவு சான்றிதழுக்காக, கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன' என்றனர்.
காத்திருப்பு
இதுகுறித்து, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு துறை தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
கட்டட அனுமதி வழங்கும் நடைமுறையில், குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்தாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதுபோல் அனுமதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, விண்ணப்பதாரர்கள் பணத்தை திரும்ப கேட்கின்றனர்.
உள்ளாட்சி அளவில் அனுமதி வாங்கும் திட்டங்களை செயல்படுத்துவோர், சொந்த முதலீட்டில் நிலம் வாங்கி இருப்பதால், இந்த முடிவை எடுக்கின்றனர். அதனால், பல திட்டங்களில் வீடு வாங்க பணம் செலுத்திய மக்களுக்கு, பணத்தை திருப்பி தர வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.
ஆனால், சி.எம்.டி.ஏ.,வில் அனுமதி வாங்கும் அளவுக்கு பெரிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், இதில் அவசரம் காட்டுவதில்லை. அரசின் முடிவுக்காக அவர்களால் காத்திருக்க முடியும்.
சிறிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தும் கட்டுமான நிறுவனங்களுக்கு தான், இதில் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், கட்டுமான அனுமதிக்கான பணத்தை கேட்டு கடிதம் கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

