ADDED : ஜன 15, 2024 02:12 AM
அன்பே கடவுள் என்பதை, உலகுக்கு முதலில் உணர்த்திய திருமூலர், 'பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்து வாழுங்கள்' என்றார். தற்காலத்தில் நேசிப்பு குறைந்துவிட்டது. நேசிப்பவர்களே நேசிக்கப்படுவர்.
'ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்' என்ற பாடலில், 'ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அனைவருக்கும் உணவளிக்க வேண்டும். சமைத்த உணவை நாளைக்கென சேமித்து வைக்காமல், பசியோடு இருப்போருக்கு வழங்க வேண்டும். அவசர கதியில் சாப்பிடாமல், காக்கைபோல் பகிர்ந்து சாப்பிட வேண்டும்' என வலியுறுத்துகிறார் திருமூலர்.
வள்ளலாரும், பாரதியாரும் திருமூலரின் இந்தத் திருமந்திரத்தை வேதவாக்காக எடுத்து, தங்கள் வாழ்க்கையிலும் பின்பற்றினர்.
இன்று, நம் உடலும் மனமும் வெவ்வேறு இடத்தில் உள்ளன. உடல் ஓரிடத்தில் இருக்கும்போது, மனம் வேறு எங்கோ அலைப்பாய்கிறது. திருமூலரின் 'திருமந்திரம்' நிகழ்காலத்தில் நம்மை வாழ வைக்கும் சக்தி மிக்கது. இதைத்தான் 'இக்கணம் வாழ்' என்றார் புத்தர்.
தன்னை அறிந்தோருக்கு உலகில் கேடு தரும் எதுவும் இல்லை. தமிழ் இலக்கியங்களின் தங்கப் புதையல் திருமந்திரம்.
ஆறாம் நுாற்றாண்டு முதல் ஒன்பதாம் நுாற்றாண்டு வரையான பக்தி இலக்கியங்களே தமிழ் மொழியை செழுமையாக வளர்த்து, அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.
உலகில் தீண்டத்தக்கது என, எதுவும் இல்லை. அனைத்தையும் வாசிக்க வேண்டும். எல்லா இலக்கியங்களிலும் நல்ல கருத்துகள் உள்ளன.
அரசியல் அறிஞர்களை மதம், ஜாதி என்ற வட்டத்திற்குள் எப்படி அடைத்துவிட்டோமோ, அதுபோல் இலக்கியங்களையும் அவரவர் வட்டத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டோம்.
காலத்தை வென்றவர்களையே காலம் ஞாபகத்தில் வைத்திருக்கும். காலத்தின் ஞாபகத்தில் நாம் இருக்க வேண்டுமானால், அதற்கு அன்பு அவசியம். அன்பு வளர வாசிக்க வேண்டும்.
புத்தகக் காட்சியில், 'திருமூலரின் தீர்க்க தரிசனம்' எனும் தலைப்பில் மை.பா.நாராயணன், இவ்வாறு பேசினார்.