/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு மருத்துவமனையில் இயந்திரம் வெடித்து விபத்து பகீர்!பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக்கு தீப்பிடித்து 'சீரியஸ்'
/
அரசு மருத்துவமனையில் இயந்திரம் வெடித்து விபத்து பகீர்!பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக்கு தீப்பிடித்து 'சீரியஸ்'
அரசு மருத்துவமனையில் இயந்திரம் வெடித்து விபத்து பகீர்!பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக்கு தீப்பிடித்து 'சீரியஸ்'
அரசு மருத்துவமனையில் இயந்திரம் வெடித்து விபத்து பகீர்!பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைக்கு தீப்பிடித்து 'சீரியஸ்'
ADDED : மார் 16, 2026 05:24 AM

சென்னை: மாநகராட்சி மருத்துவமனையில், உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்கான 'வார்மர்' இயந்திரம் வெடித்து தீப்பிடித்ததில், பிறந்து அரை மணி நேரமே ஆன ஆண் குழந்தைக்கு 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. அக்குழந்தைக்கு எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரம்பூர், மதுரை தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு, 34; தனியார் நிறுவன ஊழியர். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி தனலட்சுமிக்கு, 29, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள மாநகராட்சியின் 24 மணி நேர அவசர மகப்பேறு மருத்துவமனையில், உடனடியாக சேர்க்கப்பட்டார்.
இந்த மருத்துவமனையில், பிரசவத்திற்கான அனைத்து உபகரணங்களும், வசதிகளும் உள்ளன. செவிலியர் மற்றும் டாக்டர் பிரசவம் பார்த்ததை அடுத்து, நள்ளிரவு 12:30 மணிக்கு, ஆண் குழந்தை பிறந்தது.
செவிலியர்கள், குழந்தையின் உடலை சுத்தம் செய்து, உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்கான 'வார்மர்' இயந்திரத்தில், குழந்தையை வைத்தனர்.
குறைவான எடை, குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை காக்க, வார்மர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலை நோய் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவும், இது பயன்படுகிறது. சில குழந்தைகளுக்கு, வெப்ப நிலையை பராமரிப்பதுடன் ஆக்ஸிஜன் சப்ளையையும் வழங்குகிறது.
குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் அல்லது அதிக பட்சம் மூன்று நாட்கள் வரை, டாக்டர்கள் பரிந்துரையின்படி, சிகிச்சையை பொறுத்து, வார்மர் இயந்திரத்தில் குழந்தை வைக்கப்படும்.
இது போன்ற சிகிச்சை முறைக்காக, குழந்தையை வைத்த அடுத்த 30 நிமிடங்களில், வார்மர் இயந்திரம் திடீரென வெடித்து தீ பிடித்து எரிந்தது. சுதாரித்த செவிலியர்கள், இயந்திரத்தின் சுவிட்சை உடனே ஆப் செய்து குழந்தையை மீட்டனர்.
எனினும், குழந்தையின் தலை, தொடை, முதுகு உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் மாநகராட்சி மருத்துவமனையில், பிறந்த குழந்தையின் தாய் தனலட்சுமி சிகிச்சையில் உள்ளார்.
தீ விபத்தில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகளும், வேப்பேரி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
விபத்து குறித்து குழந்தை யின் தந்தை ஆனந்த் பாபு, கூறியதாவது:
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:38 மணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை வார்மர் இயந்திரத்தில் வைத்த சில நிமிடங்களிலேயே தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்தனர்.
முதலில் மருத்துவமனை நிர்வாகம், தீ விபத்து குறித்து மறைத்தது. பின், வார்மர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, குழந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தீக் காயங்களை மறைக்க ஆயில்மென்ட் எனும் களிம்பு தேய்த்தனர். என் குடும்பத்தினரை, உள்ளேவிட மறுத்துவிட்டனர்.
பின் மேல் சிகிச்சைக்காக, நேற்று மதியம் 1:14 மணிக்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தையின் உடலில் 30 சதவீதம் தீக்காயங்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்கள் இருப்பதாக கூறியுள்ளனர். தீயால் தலை உள்ளிட்ட இடங்களில் நிரந்தர வடுக்கள் ஏற்படும் என்கின்றனர்.
குழந்தை குணமடைந்தாலும், வாழ்நாள் முழுதும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் நிலை உள்ளது. அலட்சியமாக நடந்துகொண்ட மருத்துவமனை நிர்வாகம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க, ராயபுரம் மண்டல சுகாதார அதிகாரி வசந்தியை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
அந்த வார்மர் இயந்திரம், தொழில்நுட்ப கோளாறு அல்லது மின் கசிவு காரணமாக வெடித்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

