/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியின் கீழ் வந்தும் பயனில்லை மழைநீர் கால்வாய் இல்லாத மடிப்பாக்கம்
/
மாநகராட்சியின் கீழ் வந்தும் பயனில்லை மழைநீர் கால்வாய் இல்லாத மடிப்பாக்கம்
மாநகராட்சியின் கீழ் வந்தும் பயனில்லை மழைநீர் கால்வாய் இல்லாத மடிப்பாக்கம்
மாநகராட்சியின் கீழ் வந்தும் பயனில்லை மழைநீர் கால்வாய் இல்லாத மடிப்பாக்கம்
ADDED : செப் 01, 2025 01:23 AM

மடிப்பாக்கம்:சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகியும், மடிப்பாக்கத்தின் சில பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இங்குள்ள, காஞ்சி காமாட்சி நகர், பெரியார் நகரில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மடிப்பாக்கத்தில், ஊராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட பழைய மழைநீர் வடிகால்வாயே உள்ளது. அதுவும் துார்ந்த நிலையில், கால்வாய் இருப்பதே தெரியாத அளவில் உள்ளது.
இதுகுறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
எங்கள் பகுதி மாநகராட்சியின் கட்டுபாட்டின் கீழ் வந்து, 15 ஆண்டுகளாகின்றன. வரியும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதையும் முறையாக கட்டி வருகிறோம்.
ஆனால், காஞ்சி காமாட்சி நகர் 1, 2, 3 தெருக்கள், பெரியார் நகர் 4, 5 தெருக்களில் இருந்து மழைநீர் வெளியேற, லட்சுமி நகர் 2வது தெருவில் உள்ள பழைய கால்வாயே பிரதானம்.
ஆனால், அந்த கால்வாயும் மண் சரிந்து துார்ந்து போய் உள்ளது. இதனால், மழைநீர் செல்ல வழியில்லை. தவிர, கழிவுநீர் இணைப்பு இல்லாதவர்கள், இந்த கால்வாயில் தான் கழிவுநீரை கலக்கின்றனர்.
இதனால், சிறு மழை பெய்தாலும், மழை நீரோடு கழிவுநீர் கலந்து, வீடுகளில் புகுந்து பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு, பலருக்கு தொற்று நோய் பாதிப்பும் ஏற்படுகிறது.
இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் மனுக்களுக்கு, 'தேவையெனில் கால்வாய் அமைக்கப்படும்' என, பதில் மட்டும் தான் வருகிறது. ஆய்வு செய்ய அதிகாரிகள் நேரில் வருவதே இல்லை.
எனவே, வரும் பருவமழைக்குள் இருக்கும் கால்வாயை துார் வாருவதுடன், மழைநீர் இலாத பகுதிகளில் புதிதாக அமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.