sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகள் பராமரிப்பு மாநகராட்சி வசம்! 30 ஆண்டு மேற்கொள்ள 'சிட்கோ'வுடன் ஒப்பந்தம்

/

கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகள் பராமரிப்பு மாநகராட்சி வசம்! 30 ஆண்டு மேற்கொள்ள 'சிட்கோ'வுடன் ஒப்பந்தம்

கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகள் பராமரிப்பு மாநகராட்சி வசம்! 30 ஆண்டு மேற்கொள்ள 'சிட்கோ'வுடன் ஒப்பந்தம்

கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகள் பராமரிப்பு மாநகராட்சி வசம்! 30 ஆண்டு மேற்கொள்ள 'சிட்கோ'வுடன் ஒப்பந்தம்


UPDATED : பிப் 07, 2026 07:16 AM

ADDED : பிப் 07, 2026 06:04 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 07:16 AM ADDED : பிப் 07, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு, வடிகால்வாய் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு பணிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இந்த பணிகளை, 30 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகமான 'சிட்கோ'வுடன், மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 'சிட்கோ' எனும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக, தொழிற்பேட்டைகள் செயல்படுகின்றன. இவற்றில், பிளாஸ்டிக், காலணி உட்பட ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியின், 84, 85, 86வது வார்டு எல்லையில், அம்பத்துார் தொழிற்பேட்டை உள்ளது; 1,167 ஏக்கர் பரப்பில் செயல்படுகிறது. அதேபோல் 168வது வார்டில் உள்ள கிண்டி தொழிற்பேட்டை, 404.08 ஏக்கர் பரப்பில் உள்ளது.

இரண்டு தொழிற்பேட்டைகளிலும், சிறியது, பெரியது என, 3,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான ஊழியர்கள்பணிபுரிந்து வருகின்றனர்.

மாநகராட்சி எல்லையில் இருந்தாலும், இங்குள்ள வளாக சாலை, துாய்மை பணி, வடிகால்வாய், தெருவிளக்கு, பூங்கா உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை, சிட்கோ நிர்வாகம் செய்து வந்தது. இதற்காக ஒவ்வொரு தொழில் நிறுவனங்களில் இருந்தும், பராமரிப்பு கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது.

துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டதால், குப்பை சேகரிப்பு, சாலை, வடிகால்வாய்களை சுத்தம் செய்தல் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகள், தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்திடன் ஒப்படைக்கப்பட்டன.

அம்பத்துார் தொழிற்பேட்டை வளாகம், அங்குள்ள சங்கத்திடம் 2005யிலும், கிண்டி தொழிற்பேட்டையை அங்குள்ள சங்கத்திடம் 2022லும் ஒப்படைக்கப்பட்டன. அச்சங்கங்கள், தொழில் நிறுவனங்களிடம் பராமரிப்பு கட்டணத்தை வசூலித்து வந்தன.

தொழிற்பேட்டையை ஒட்டி உள்ள பகுதியை மாநகராட்சியும், தொழிற்பேட்டை வளாகத்தை சங்கங்களும் பராமரித்து வந்தன.

இதில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. தொழில் நிறுவன வளாகங்களில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கினால், அதை அகற்ற வேண்டியது யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. குப்பையை இடம் மாற்றி கொட்டுவதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து, நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தொழிற்பேட்டைகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன், இப்பிரச்னைக்கு மாற்று நடவடிக்கை தேவை என, வலியுறுத்தினார்.

தி.மு.க., கவுன்சிலர்களும், 'தொழிற்பேட்டைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்' என, மன்ற கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், உள்ளாட்சி மற்றும் தொழில் துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்கு பின், கிண்டி, அம்பத்துார் ஆகிய தொழிற்பேட்டை பராமரிப்புகளை, மாநகராட்சி ஏற்கும் வகையில், சிட்கோ நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் காரணமாக, பராமரிப்பு பணிக்கென தனியாக மாநகராட்சியிடம் கட்டணம் கட்ட வேண்டிய தேவை இருக்காது என, தொழில் நிறுவனங்களும் நிம்மதி அடைந்துள்ளன.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி எல்லையில் இந்த தொழிற்பேட்டைகள் இருப்பதால், பராமரிப்பு பணியில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதுடன், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

பல்வேறு தரப்பு கோரிக்கையையடுத்து, இந்த இரண்டு தொழிற்பேட்டை வளாகங்களின் பராமரிப்பு பணியை, மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.

இதற்காக, 30 ஆண்டுகள் பராமரிப்பு பணிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம், சிட்கோ நிறுவனத்துடன் கையெழுத்தாகி உள்ளது. டெண்டர் விடுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்குப்பின் பராமரிப்பு பணிகள் கைமாறும்.

சாலை, வடிகால்வாய், தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதாரம், குப்பை சேகரிப்பு உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும்.

இதன் வாயிலாக, இதர பகுதிகளைபோல் சிட்கோ வளாகமும் புதுப்பொலிவுடன் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒத்துழைப்பு அளிப்போம்

'சிட்கோ' கூறிய ஆலோசனைப்படி, தொழிற்பேட்டை வளாகத்தை முறையாக பராமரித்து வந்தோம். எனினும், பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்ததால், மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவானது. இதை நாங்கள் வரவேற்கிறோம். மாநகராட்சிக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.
- கிரீஸ் பாண்டியன், தலைவர், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கிண்டி



பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுமா?

இரண்டு தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, மாநகராட்சி சார்பில், சொத்து வரி, தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பராமரிப்பு கட்டணம் என, ஆண்டுதோறும் ஏக்கருக்கு, 35,000 முதல் 40,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. மாநகராட்சியிடம் ஒப்படைத்ததால், இனிமேல் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படாது என, தொழில் நிறுவனங்கள் நம்புகின்றன; இதுசம்பந்தமாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது றித்து, சிட்கோ அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பராமரிப்பு கட்டணம் வசூல் நிறுத்துவது தொடர்பாக இன்னும் முடிவாகவில்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்தபின் முடிவு எடுக்கப்படும்' என்றனர்.



தொழிற்பேட்டை வளாக விபரம்
அம்பத்துார் துவங்கியது - 1971
பரப்பு - 1,167 ஏக்கர்
சாலை எண்ணிக்கை - 128
சாலை துாரம் - 41 கி.மீ.,
மழைநீர் வடிகால்வாய் நீளம் - 84 கி.மீ.,
தெரு விளக்குகள் - 1,558
உயர் கோபுர விளக்குகள் - 8
சேகரிக்கப்படும் குப்பை - 40 டன்
கிண்டி துவங்கியது - 1958
பரப்பு - 404 ஏக்கர்
சாலை எண்ணிக்கை - 82
சாலை துாரம் - 15 கி.மீ.,
மழைநீர் வடிகால்வாய் நீளம் - 23 கி.மீ.,
தெரு விளக்குகள் - 344
உயர் கோபுர விளக்குகள் - 2
சேகரிக்கப்படும் குப்பை - 20 டன்








      Dinamalar
      Follow us