/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால்கனி இடிந்து வாலிபர் பலியால் ஆவேசம் மறியலால் முடங்கிய முக்கிய சாலைகள்
/
பால்கனி இடிந்து வாலிபர் பலியால் ஆவேசம் மறியலால் முடங்கிய முக்கிய சாலைகள்
பால்கனி இடிந்து வாலிபர் பலியால் ஆவேசம் மறியலால் முடங்கிய முக்கிய சாலைகள்
பால்கனி இடிந்து வாலிபர் பலியால் ஆவேசம் மறியலால் முடங்கிய முக்கிய சாலைகள்
ADDED : டிச 06, 2024 12:23 AM

சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சையது சிலான். இவரது மகன் சையது குலாம், 23; தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, குடியிருப்பின், மூன்றாவது தளத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த சையது குலாமை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உறவினர்கள், அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், லுாப் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரமடைந்து, லுாப் சாலை - சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கீழே தள்ளி தாக்கினர். மேலும், வாகனங்கள் செல்லாத வகையில், கற்களை சாலையில் போட்டு, கீழே அமர்ந்தும் கோஷமிட்டனர். வேறு வழியின்றி, வாகன போக்குவரத்தை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பிவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வேலு பேச்சு நடத்தினார். அப்போது, இறந்தவரின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., வேலு, “தற்போது இழப்பீடு தொகை, 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ப மாநகராட்சி அல்லது குடிசை மாற்று வாரியத்தில் ஒருவருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்கிறேன்,” என்றும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக்சாலை, அடையாறு எல்.பி.சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அன்பரசன் அறிக்கை:
சீனிவாசபுரம் குடியிருப்புகள் ஒதுக்கி, 60 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட கால பயன்பாடு, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டால் கட்டடம் சிதிலம் அடைந்துள்ளது.
வல்லுனர் குழு பரிந்துரைப்படி, மறு கட்டுமானம் செய்யப்பட உள்ளது. இதற்காக, வீடுகளை காலி செய்யும்படி, 2022 ஜனவரி, 20, மார்ச் 9ல், வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பால்கனி இடிந்து விழுந்து, சையது குலாப் இறந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து, சிதிலம் அடைந்த குடியிருப்புகளை காலி செய்து தந்தால், புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும். இடைப்பட்ட காலத்திற்கு கருணைத்தொகையாக, ஒரு குடும்பத்திற்கு, 24,000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.