/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
110 சவரன் நகையை பெற்று பெண்ணை மிரட்டியவர் கைது
/
110 சவரன் நகையை பெற்று பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : ஜூலை 15, 2025 12:40 AM
ராஜமங்கலம், நான்கு ஆண்டுகளாக பழகி வந்த இளம்பெண்ணிடம், தொழில் துவங்குவதாக கூறி, 110 சவரன் நகையை பெற்று, அதனை திருப்பி கொடுக்காமல் மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், 33 வயது இளம்பெண், அண்ணா நகர் பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது, கொரட்டூரைச் சேர்ந்த சிவா, 51, என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய சிவா, நான்கு ஆண்டுகளாக இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். மேலும், உணவகம் துவங்க இருப்பதாக கூறி, இளம்பெண்ணிடம் இருந்து, 110 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை சிவா வாங்கியுள்ளார்.
இதனிடையே, திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏற்கனவே ஒரு பெண்ணை சிவா ஏமாற்றியதை அறிந்து, இளம்பெண் அவரிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவா, இளம்பெண்ணை தாக்கியதோடு, 'ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன்' எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், சிவாவை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.