/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பஸ் கண்ணாடி மீது கல் வீசி உடைத்தவர் கைது
/
மாநகர பஸ் கண்ணாடி மீது கல் வீசி உடைத்தவர் கைது
ADDED : செப் 26, 2025 12:40 AM
கோயம்பேடு, பேருந்தின் கதவை ஓட்டுநர் மூடியதால், கல் வீசி பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்தவரை, போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு - பூந்தமல்லி செல்லும் தடம் எண்: '16 ஜெ' மாநகர பேருந்தை, நேற்று முன்தினம் காலை, ஓட்டுநர் அலெக்சாண்டர், 53, இயக்கினார். விருகம்பாக்கம், சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் ஏறியதும், பேருந்தின் கதவை ஓட்டுநர் அடைத்தார். அப்போது, பேருந்தில் ஏற வந்த போதை ஆசாமி, நடத்துநரை பார்த்து அவதுாறாக பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஆத்திரமடைந்த போதை ஆசாமி, கீழே கிடந்த கல்லை எடுத்து வீசி, பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த பிரசாந்த், 39, என்பதும், கட்டட வேலை செய்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து, பிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.