ADDED : செப் 15, 2026 09:14 PM
பூந்தமல்லி: நெஞ்சுவலி காரணமாக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெயின்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் சந்திரன், 57; பெயின்டர். இவர் பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் நேற்று மாலை வீடு ஒன்றில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் பணியாற்றியவருடன் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சந்திரன் மருத்துவமனையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், மருத்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அவர்கள் கூறுகையில், நெஞ்சுவலியுடன் வந்த சந்திரனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால், அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சந்திரன் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
