/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடுகள் உலா வரும் மணலி பஸ் நிலையம் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
/
மாடுகள் உலா வரும் மணலி பஸ் நிலையம் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
மாடுகள் உலா வரும் மணலி பஸ் நிலையம் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
மாடுகள் உலா வரும் மணலி பஸ் நிலையம் அடிப்படை வசதியின்றி பயணியர் தவிப்பு
ADDED : நவ 25, 2024 03:06 AM

மணலி:அடிப்படை வசதிகள் இல்லாத, மணலி பேருந்து நிலையத்தில், மாடுகள் உலா வருவதால், பயணியர் அச்சம் அடைந்துள்ளனர்.
மணலி, பாடசாலை தெரு - நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, உயர்நீதிமன்றம், பிராட்வே, மூலக்கடை, கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. முழுதும் மேற்கூரையின்றி இருப்பதால், பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் வெயில், மழையில் நிறுத்தப்படுகின்றன.
வளாகத்தில், பயணியர் தேவைக்காக குடிநீர், கழிப்பறை வசதி ஏதும் இல்லை. இருக்கும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. தவிர, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை, பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. பார்க்கிங் பகுதிகளில், சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.
பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் ஓய்வுக்காக அறை ஏதும் கிடையாது. அவர்கள் வேறு வழியின்றி, பயணியர் நிழற்குடையில் படுத்து ஓய்வெடுக்கும் அவலநிலை உள்ளது.
பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள, செயற்கை நீருற்றுகளும் முறையாக பராமரிக்கப்படாமல், பழுதடைந்துள்ளது. அதிகளவில் மாடுகள், இங்கு உலா வருவதால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் அச்சம் அடைகின்றனர். சில நேரங்களில், மிரண்டு ஓடும் மாடுகளால், பயணியரும் ஓட்டம் பிடிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மணலி மண்டலம், 21 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் சேகர் கூறுகையில், ''பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும். நிலையத்தை, 6 கோடி ரூபாயில் நவீனப்படுத்தும் பணியும் விரைவில் துவங்கும்,'' என்றார்.