/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அந்துமணி பதில்கள்' உட்பட 47 நுால்கள் வெளியிட்டது மணிமேகலை பிரசுரம்
/
'அந்துமணி பதில்கள்' உட்பட 47 நுால்கள் வெளியிட்டது மணிமேகலை பிரசுரம்
'அந்துமணி பதில்கள்' உட்பட 47 நுால்கள் வெளியிட்டது மணிமேகலை பிரசுரம்
'அந்துமணி பதில்கள்' உட்பட 47 நுால்கள் வெளியிட்டது மணிமேகலை பிரசுரம்
ADDED : ஜன 15, 2024 02:04 AM

'தினமலர்' நாளிதழின் 'வாரமலர்' இணைப்பில் வெளியாகிவரும் 'அந்துமணி பதில்' பகுதிக்கு, பெரும் வாசகர் வட்டம் உண்டு.
வாசகர்களின் கேள்விக்கு ஆழமாகவும், நகைச்சுவை ததும்பும் வகையிலும் பதில் இருப்பதால், வாசகர் வட்டத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
எல்லாக் காலத்திலும், அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய 'அந்துமணி பதில்கள்' குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இதுவரை, ஏழு தொகுப்புகள் புத்தகமாக வெளியிடப்பட்டு, அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில், 'அந்துமணி பதில்கள்' எட்டாவது தொகுப்பு நூல், மணிமேகலைப் பிரசுரத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் சேர்த்து, மற்ற எழுத்தாளர்களின் 46 நுால்களும், புத்தகக் காட்சியில் நேற்று வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நீதிபதி சுந்தர மோகன் பேசியதாவது:
சிறப்பு அழைப்பாளராக பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வேன். முதன் முறையாக புத்தக வெளியீட்டிற்கு வந்துள்ளேன். இந்த விழா எனக்கு வியப்பைத் தருகிறது.
எழுத்தாளர்களே முழு மனிதர்கள். இங்கு வெளியிடப்பட்டுள்ள 47 புத்தகங்களும் விதவிதமான கருத்துகளைத் தாங்கி நிற்கின்றன.
புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி, பல அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி உள்ளனர்.
மணிமேகலை பிரசுரம் இதுவரை 4,500க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டிருப்பது, இத்துறையில் மாபெரும் சாதனை.
நான் டென்னிஸ் வீரன். ஒரு முறை விளையாட்டில் காயமடைந்து, வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை உருவானது. அந்த ஓய்வில்தான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்பே என்னை நீதிபதியாக உயர்த்தியது. அச்சு ஊடகமும், மின்னணு ஊடகமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நக்கீரன் கோபால் பேசுகையில், ''ஒரே நாளில் 47 புத்தகங்களை வெளியிடுவது சாதாரண காரியமில்லை. பதிப்புத் துறையில் மணிமேகலைப் பிரசுரம் எங்களைப் போன்றோருக்கு முன் ஏர் போன்றது. அவர்கள் அமைத்த பாதையில்தான் நாங்கள் பயணிக்கிறோம்,'' என்றார்.
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும், ரவி தமிழ்வாணன் நன்றி கூறினார்.
- நமது நிருபர் -