/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்கழி இசை கச்சேரி - பக்தியும் அன்பும் வழிந்த கிரிஷின் இசை கச்சேரி
/
மார்கழி இசை கச்சேரி - பக்தியும் அன்பும் வழிந்த கிரிஷின் இசை கச்சேரி
மார்கழி இசை கச்சேரி - பக்தியும் அன்பும் வழிந்த கிரிஷின் இசை கச்சேரி
மார்கழி இசை கச்சேரி - பக்தியும் அன்பும் வழிந்த கிரிஷின் இசை கச்சேரி
ADDED : டிச 16, 2024 03:40 AM

நல்ல கணீர் குரலில் கானடா ராகத்தை மனதில் நிலைநாட்டிய பின், ஆதி தாளத்தில் திருவொற்றியூர் தியாகராயரின் நின்னுகோரி வர்ணம் பாடி கச்சேரியை துவங்கினார் திருவாரூர் கிரிஷ்.
மிஸ்ர சாபு தாளத்தில், கவுளையில் 'ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்' எனும் கிருதியிலுள்ள சிட்டை ஸ்வரங்களை ஒரே முறையில் இரு காலப்பிரமாணத்தில் பாடி அசத்தினார்.
'பிரகாசகரோ பவஜலதினாரோ' எனும் வரிகளுக்கு நிரவல் செய்தபோது, வயலின் கலைஞர் வி.எல்.குமார், தன் கைவண்ணத்தில் கல்பனா ஸ்வரங்களை கோர்த்து குரலிசைக்கு ஈடு வழங்கினார். அதன் கோர்வையுடன், முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியை, இருவரும் அழகாக முடித்தனர்.
தொடர்ந்து, உமாபரணம் ஆதி தாளத்தில், தியாகராஜரின் முத்திரையை பதித்து 'நிஜமரமான நிஜமரமானுலனு' எனும் கிருதியை பாடினார்.
அன்பு பெருக்கெடுக்கும் ராகமான ஆனந்த பைரவியில், 'பாஹி ஸ்ரீ கிரிராஜ சுதே' கிருதியிலுள்ள சிட்டை ஸ்வரங்களை, பார்வையாளர்களின் மனதில் வேரூன்ற செய்தார்.
லத்தாங்கி ராக கிருதிக்கு பின், கச்சேரியின் பிரதானமான உருப்படியாக தியாகராஜரின் 'சக்கனி ராஜா' கிருதியை ஹிந்துஸ்தானியில் காபி எனும் ராகமான கரஹரபிரியா ராகத்தில், ஆதி தாளத்தில் தொடுத்தனர்.
ராக ஆலப்பனை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், குறைப்பு ஸ்வரங்கள், சர்வலகு மற்றும் கோர்வைகளை, பக்தியும் அன்பும் வழிய கிரிஷ் நயமுடன் வழங்கினார்.
நிகழ்ச்சியை மெருகேற்றும் வகையில், மிருதங்கத்தில் கார்த்தி கிருஷ்ணமூர்த்தி, கடத்தில் ப்ரசன்னா ஹரிஹரன், தனி ஆவர்த்தன சமர்ப்பித்தனர்.
இறுதியில், பட்டணம் சுப்பிரமணிய அய்யரால் இயற்றப்பட்ட பெஹாக் ராக ஜாவளியை ரூபக தாளத்தில் பாடி, கச்சேரியை இனிதாக முடித்தார்.
முத்ரா ஏற்பாடு செய்த, இந்த மார்கழி இசை கச்சேரியில், கிரிஷ்ஷின் நிகழ்ச்சி, இணையம் வாயிலாக நடந்தது.
- இரா.பிரியங்கா.