ADDED : ஜன 05, 2024 01:05 AM
கர்நாடக இசை உலகில் ஒரு இசை சூரியன் போல தன் இசை திறமையால் ஜொலித்துக் கொண்டும் பல்வேறு இசை ஆராய்ச்சிகள் மற்றும் தமிழிசையை வளர்க்க தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ .ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சங்கீத கலாநிதி, இசை பேரறிஞர் .முனைவர் .விதூஷி சௌமியா அவர்கள் தமிழ் இசைக்கென தனித்துவமாக பிரசித்தி பெற்று விளங்கும் தமிழ் இசை சங்கத்தில் தன் இசை கச்சேரியை நிகழ்த்தினார். முதலாவதாக இவரது குரு முனைவர் எஸ் .ராமநாதன் அவர்கள் இயற்றிய ரீதிகௌளை ராகத்தில் ஆதி
தாளத்தில் அமைந்த நீலமயில் எனும் வர்ணத்தை பாடி மனதை மகிழ்வித்தார்.
பிறகு இந்தோளம் ராகத்தில் பிரயோகங்களை தேர்ந்தெடுத்து பாடி ரசிக்க வைத்தார் .தொடர்ந்து இந்த ராகத்தை வயலினில் இசைத்த கலைமாமணி எம்பார் எஸ்.கண்ணன் அவர்களின் வாசிப்பும் தனித்துவம் பெற்றது. இந்த ராகத்தில், ரூபக தாளத்தில் தமிழ் தியாகைய்யர் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய மா ரமணன்எனும் கீர்த்தனையை பாடினார். இங்கு கீர்த்தனைக்கு ஏற்றவாறு சரியான ஒரு காலப்பிரமாணத்தில் சுவையான ராக ஸ்வரங்களைக் கொண்டு ஸ்வரம் பாடினார். தன் சிஷ்யை சுபஸ்ரீ அவர்களையும் பாட வைத்து அழகு பார்த்தார் .ரசிக்கும்படியான
பிரயோகங்கள் அருமை. இவர்களுக்கு இணையாக வயலின் வித்வான் ,மிருதங்க வித்வான் அவர்களும் இசைத்து பாராட்டுக்கள் பெற்றார்கள். அடுத்தபடியாக தேவ காந்தாரி எனும் ராகத்தை ஒரு தாய் தன் குழந்தையை கொஞ்சுவது போல இந்த ராகத்தை கையாண்டார். வயலின் வித்வான் அவர்களும் அழகாக ராகத்தை கொஞ்சினார். இந்த ராகத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய எந்நேரமும் உந்தன் சந்நிதியில் எனும் ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினார். அவர் இயற்றிய வார்த்தைகளை இவர் பாடி மேலும் அழகுபடுத்தினார்.
அடுத்தபடியாக சந்தப் பாவலர் அருணகிரிநாதர் இயற்றிய ஹம்சா நந்தி ராகத்தில் அமைந்த துள்ளுமத வேட்கை எனும் திருப்புகழ் பாடி
முருகப்பெருமானை போற்றினார்.
தொடர்ந்து பைரவி ராகத்தில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கறிக்கின்றது என்றும் தீரா வழக்குகாணடி எனும் பாடலை பாடி அரங்கெங்கும் பக்தி மனம் கமல வைத்தார்.
பிறகு லய வித்வான் பிரவீன் ஸ்பர்ஸ் அவர்கள் தனி ஆவர்த்தணம் இசைக்கத் தொடங்கினார்.அரங்கத்தை அதிரவும், அனுபவிக்கவும், இரசிக்கவும் வைத்தார்.
நிறைவாக பெஹாக் இராகத்தில் ஆடும் சிதம்பரமோஎனும் பாடலை பாடி நிறைவு செய்தார். இசை உலகில் தனக்கென தனிப் பெயரும், தனிப் பொறுப்பும் கொண்டு
செயல்பட்டு வரும் இவர் தற்போதைய இசை உலகில் வருங்கால இசைக் கலைஞர்களின் ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.