/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்
/
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா துவக்கம்
ADDED : பிப் 17, 2024 12:17 AM

திருவொற்றியூர் திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு மாசி பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தியாகராஜர் சன்னிதி முன், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, விசேஷ யாகங்கள் நடத்தப்பட்டன.
பின், வேதமந்திரங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க, கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடி மரம் முன், விநாயகர் மற்றும் தியாகராஜ சுவாமி எழுந்தருளினர்.
கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. பின், சாம்பிராணி துாபமிட, தொட்டியில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமி, நான்கு மாடவீதி உலா வந்தார்.
நேற்று காலை, உற்சவர் சந்திரசேகரர் சூரியபிரபை மற்றும் இரவில் சந்திர பிரபையிலும் எழுந்தருளினார்.
தொடர்ந்து, விழா நாட்களில், உற்சவர், பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமான கிரி, யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.
பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம், 21ம் தேதி காலை, 9:00 - 10:00 மணி வரையும், திருக்கல்யாணம், 23ம் தேதி காலை 9:00 - 10:30 மணி வரையும் நடைபெற உள்ளது.
நிறைவாக, 24ம் தேதி, கொடியிறக்கம், 25ம் தேதி பின் இரவில், தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் - 18 திருநடனத்துடன் திருவிழா நிறைவுறும்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.