/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலில் சிக்கி தவிக்கும் 'மெமு' ரயில் பயணியர்
/
நெரிசலில் சிக்கி தவிக்கும் 'மெமு' ரயில் பயணியர்
ADDED : ஜூலை 13, 2025 12:17 AM
சென்னை, சென்னையில் இருந்து குறுகிய துாரத்துக்கு இயக்கப்படும் பயணியர் ரயில்களில் ஒன்பது பெட்டிகளே இணைத்து இயக்குவதால், பயணியர் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஆனால், காட்பாடி - அரக்கோணம், சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்ட்ரல், சென்னை - திருப்பதி, நெல்லுார் உட்பட 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 'மெமு' வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவை அனைத்திலும், எட்டு அல்லது ஒன்பது பெட்டிகளே இணைக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும், குறுகிய துார பயணியர் ரயில்களாக இயக்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்ட பயணியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், 'மெமு' வகை ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அலுவலக நேரங்களில் பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
தற்போது, அனைத்து மின்சார ரயில்களிலும் 12 பெட்டிகளாக இணைத்து இயக்குவது வரவேற்கதக்கது. அதுபோல், குறுகிய துாரம் செல்லும் 'மெமு' வகை ரயில்களிலும் 12 பெட்டிகளாக இணைத்து இயக்கினால், பயணியர் நெரிசல் இன்றி செல்ல முடியும்.
கூடுதலாக பயணியரும் பயணிக்கலாம். இது குறித்து, தெற்கு ரயில்வேயிடம் மனுவும் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.