ADDED : ஆக 28, 2026 08:44 PM

சென்னை: ‘‘சென்னையில் மேலும் மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது,’’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சட்டசபையில் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித்தடங்களில், 118 கி.மீ., துாரத்திற்கு திட்டப்பணிகள் நடக்கின்றன; 128 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள், 63,246 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.
விமான நிலையம் – கிளாம்பாக்கம்; பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம்; கோயம்பேடு – பட்டாபிராம் வழித்தடங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, விம்கோ நகர் – அசிசி நகர், கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு, சிறுசேரி – முட்டுக்காடு வழித்தடங்களில் புதிய மெட்ரோ திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்ட்ரல் – மாமல்லபுரம் இடையே நீர் வழி மெட்ரோ திட்டமும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
