/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புது வழித்தடத்தில் 6 இடங்களில் மெட்ரோ ரயில் 'கிராஸ் ஓவர் டிராக்'
/
புது வழித்தடத்தில் 6 இடங்களில் மெட்ரோ ரயில் 'கிராஸ் ஓவர் டிராக்'
புது வழித்தடத்தில் 6 இடங்களில் மெட்ரோ ரயில் 'கிராஸ் ஓவர் டிராக்'
புது வழித்தடத்தில் 6 இடங்களில் மெட்ரோ ரயில் 'கிராஸ் ஓவர் டிராக்'
ADDED : டிச 14, 2025 05:02 AM
சென்னை: 'மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் தடத்தில், ராயப்பேட்டை உட்பட ஆறு இடங்களில் மெட்ரோ ரயில்கள் மாறி செல்ல, 'கிராஸ் ஓவர் டிராக்'குகள் அமைக்கும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் ஒன்றாக, மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வரையிலான, 45.4 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 மேம்பால மெட்ரோ நிலையங்களும் இடம்பெற உள்ளன. மற்ற இரு வழித்தடங்களை காட்டிலும், இந்த தடத்தில்தான் சுரங்கப்பாதை அதிகமாக உள்ளது.
இதற்கிடையே, இந்த தடத்தில் ரயில்கள் மாறி செல்வதற்கான வசதிகள், ஆறு இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
அந்த வகையில், ராயப்பேட்டை பகுதியில் அமையும், 'கிராஸ் ஓவர் டிராக்' எனும் மெட்ரோ ரயில்கள் மாறி செல்லும் பாதை பணிகளை, ஆர்.வி.என்.எல்., மற்றும் யூ.ஆர்.சி., நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தும்போது, ஒரு குறிப்பிட்ட துாரத்துக்கு பின், 'கிராஸ் ஓவர் டிராக்' எனப்படும் மெட்ரோ ரயில்கள் மாறி செல்லும் வகையில், பாதையில் கட்டமைப்பு வசதி மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்கள் அதிகரித்து இயக்கவும், ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்போதும், அடுத்தடுத்து பாதிப்புகள் இன்றி மெட்ரோ ரயில்கள் இயக்க, 'கிராஸ் ஓவர் டிராக்' அவசியம்.
மாதவரம் - சிறுசேரி சிப்காட் தடத்தில் ராயப்பேட்டை, புரசைவாக்கம், அடையாறு, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி என ஆறு இடங்களில் கிராஸ் ஓவர் டிராக் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் பணிகள் முடியும்போது, இந்த பணிகளும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

