/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகவர்களின் அலப்பரையால் ஆவினில் பால் தட்டுப்பாடு
/
முகவர்களின் அலப்பரையால் ஆவினில் பால் தட்டுப்பாடு
ADDED : ஜூலை 20, 2025 11:49 PM
சென்னை:'ஆவின்' பாலகங்களில் பால் தட்டுப்பாடு உள்ளதால், மளிகை கடைகளில் 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை அதிக விலை கொடுத்து பால் வாங்க வேண்டியுள்ளதாக, மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சைதாப்பேட்டை அடுத்த, கிழக்கு ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள 'ஆவின்' பாலகங்களில் பால் தட்டுப்பாடு உள்ளதாக, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மற்ற கடைகளில் ஆவின் பால் கிடைப்பது எப்படி என, பகுதிமக்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
பால் நுகர்வோர் அமுதா கூறியதாவது:
ஆவின் பாலகங்களில் அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் பால் விநியோகம் செய்யப்படுகிறது. அட்டை இல்லாதோர் கேட்டால் பால் இல்லை என்கின்றனர். கடைகாரர்களிடம் கேட்டால், அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் பால் பாக்கெட் வருகிறது என்கின்றனர்.
ஆவினில் பால் கிடைக்காததால், மற்ற கடைகளில் 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டியதாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் பாலக உரிமையாளர் எம்.இளங்கோவன் கூறியதாவது:
தினமும் 20 பெட்டிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, நான்கு பெட்டிகள் தான் கொடுக்கின்றனர். இப்பகுதியில் மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால், ஒரே ஒரு ஆவின் பாலகம் மட்டும் தான் உள்ளது.
அட்டைதாரர்களை கணக்கு வைத்தே பால் விநியோகம் செய்கின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கானோர் பால் வாங்க வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எங்கள் பகுதிக்கு ஆவின் வாகனம் வருவது இல்லை. ஆவின் முகவர் வாயிலாக தான், பால் விநியோகம் செய்யப்படுகிறது. அவர், பிற கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விநியோகம் செய்கிறார். இதனால், ஆவின் பாலகத்திற்கு வழங்கும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து விடுகின்றனர்.
இதன் மூலமாக, ஆவின் முகவர்கள் வருமானம் பார்க்கின்றனர். பாலகம் வைத்திருக்கும் நாங்கள், நஷ்டத்தில் வாடுகிறோம். இந்த தவறுகள் ஆவின் அதிகாரிகளுக்கு தெரிந்து தான் நடக்கின்றன. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.