ரேடியல் சாலையில் கட்டட கழிவு கொட்டிய மினி லாரி பறிமுதல்
ரேடியல் சாலையில் கட்டட கழிவு கொட்டிய மினி லாரி பறிமுதல்
ADDED : மார் 08, 2026 05:39 AM

பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், விதிமுறையை மீறி கட்டட கழிவு மற்றும் குப்பை கொட்டிய மினி லாரியை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், விதிமுறையை மீறி கட்டட கழிவுகள், குப்பை, மருத்துவ கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதுபோல் கொட்டுவது சட்டத்திற்கு புறம்பானது; மீறி கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதையும் மீறி, இரவில் லோடு லோடாக எடுத்து வந்து கொட்டுகின்றனர். கடந்த ஆண்டு, பல்லாவரம் ஏரிக்கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வேல்ஸ் சிக்னல் அருகே உள்ள, பின்ட் ஹோட்டலை ஒட்டி, நேற்று அதிகாலை, மினி லாரியில் கட்டட கழிவு மற்றும் குப்பை எடுத்து வந்து கொட்டினர்.
தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த லாரியின் உரிமையாளர் பெயர் முனுசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, 2வது மண்டல அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும், சாலையில் விதிமீறி கட்டட கழிவுகளை கொட்டியது தொடர்பாக, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில், 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார், நேற்று புகார் அளித்தார்.
இப்புகார் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
