/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழங்குடி மக்களிடம் கெடுபிடி வேண்டாம் வனத்துறைக்கு அமைச்சர் வேண்டுகோள்
/
பழங்குடி மக்களிடம் கெடுபிடி வேண்டாம் வனத்துறைக்கு அமைச்சர் வேண்டுகோள்
பழங்குடி மக்களிடம் கெடுபிடி வேண்டாம் வனத்துறைக்கு அமைச்சர் வேண்டுகோள்
பழங்குடி மக்களிடம் கெடுபிடி வேண்டாம் வனத்துறைக்கு அமைச்சர் வேண்டுகோள்
ADDED : மே 23, 2025 12:32 AM
சென்னை:''காடுகளை பாதுகாப்பதற்கான விதிகளை அமல்படுத்தும்போது, அங்குள்ள மக்களை பாதிக்காத வகையில், மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்,'' என, வனத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
சர்வதேச பல்லுயிர் பாதுகாப்பு தின நிகழ்ச்சி, சென்னையில் நேற்று வனத்துறை சார்பில் நடந்தது. சிறப்பாக செயல்பட்ட வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கு, அமைச்சர் ராஜகண்ணப்பன் விருது வழங்கினார். அவர் பேசியதாவது:
நான் பல துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் வனத்துறையை பெரிதாக நினைக்கவில்லை. இந்த துறைக்கு அமைச்சரான பிறகுதான், இது பிரமாண்டமான துறை என்பது தெரிந்தது.
வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது தொடர்பான விதிகளை கடைபிடிப்பதில், வனத்துறையினர் கெடுபிடி காட்டுவது வழக்கம் தான். ஆனால், வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் நலனை மனதில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான சாலைகள் அமைப்பது, பஸ் வசதி செய்து கொடுப்பது, குடிநீர் வழங்கல் போன்றவற்றை செய்து கொடுப்பது அரசின் கடமை.
பெரும்பாலான இடங்களில், வனத்துறையின் ஒப்புதல் கிடைக்காததால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியா நிலை ஏற்படுகிறது. வனம் சார்ந்த விதிகளை மீற வேண்டும் என்று சொல்லவில்லை. அங்கு வசிக்கும் மக்களின் தேவைகளை புரிந்து, மனிதநேயத்துடன் செயல்படுங்கள். அரசின் திட்டங்களை செயல்படுத்த, வனத்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
30க்கு 30 முக்கியம்
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ பேசியதாவது:
சர்வதேச அளவில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, 2030ம் ஆண்டுக்குள் நாட்டின், 30 சதவீத பகுதிகளில், பல்லுயிர் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.
அதற்காக, 30க்கு 30 என்ற தலைப்பில் உயிரினங்களை பாதுகாப்பது, கடல்சார் பாதுகாப்பு, கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுப்பது, மக்கள் பங்கேற்பு ஆகிய நான்கு பிரிவுகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு சுப்ரியா கூறினார்.
வனத்துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, தமிழக பல்லுயிர் பாதுகாப்பு வாரிய உறுப்பினர் செயலர் அன்வர்தீன், திட்ட இயக்குனர் கீதாஞ்சலி பங்கேற்றனர்.