/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அற்புத குழந்தை இயேசு சர்ச் தேர் பவனி கோலாகலம்
/
அற்புத குழந்தை இயேசு சர்ச் தேர் பவனி கோலாகலம்
ADDED : ஜன 08, 2024 01:34 AM

மணலிபுதுநகர்:மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு கோவில் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டி, உப்பு மற்றும் மிளகு வைத்து, இங்கு பிரார்த்தனை மேற்கொள்வோர் ஏராளம்.
இக்கோவிலின், 44ம் ஆண்டு பெருவிழா, டிச., 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, ஆண்டின் முதல் வியாழன் 4ம் தேதி, 'அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு நாள்' திருப்பலி, மயிலை மறை மாவட்ட பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி தலைமையில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நடந்தது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், குழந்தை இயேசுவை தாங்கிய மேரி மாதா, இயேசு பிரான் மற்றும் தேவ துாதர்கள் எழுந்தருளிய ஐந்து திருத்தேர்கள் பவனி வந்தன.
தேர் பவனி, மணலிபுதுநகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் திருத்தலத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து, நேற்று காலை முதல், 'இருளகற்றும் ஒளியாக அற்புத குழந்தை இயேசு' என்ற தலைப்பில், சிறப்பு ஆசிர்வாத பெருவிழா திருப்பலிகள் நடந்தன.
இரவு, சென்னை, ஜே.டி.ஏ.எக்ஸ்., இயக்குனர் அந்தோணி செபாஸ்டியன் தலைமையில், கொடியிறக்கத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவுற்றது.
வட சென்னையின் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் ஒன்றான, அற்புத குழந்தை இயேசு கோவில், ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை, பங்கு தந்தை தங்ககுமார் தலைமையிலான பங்கு அன்பிய மக்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.