/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் மீது சரமாரி தாக்குதல் 30க்கும் மேற்பட்டோருக்கு வலை
/
போலீசார் மீது சரமாரி தாக்குதல் 30க்கும் மேற்பட்டோருக்கு வலை
போலீசார் மீது சரமாரி தாக்குதல் 30க்கும் மேற்பட்டோருக்கு வலை
போலீசார் மீது சரமாரி தாக்குதல் 30க்கும் மேற்பட்டோருக்கு வலை
UPDATED : அக் 30, 2024 06:48 AM
ADDED : அக் 30, 2024 12:26 AM
பெரும்பாக்கம்: மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் 112வது பிளாக்கைச் சேர்ந்தவர் அஜய், 19. இவர், கடந்த 8ம் தேதி இரவு 10:30 மணியளவில், 17வது பிளாக் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, 17வது பிளாக்கைச் சேர்ந்த பாளையம், 44, ராமச்சந்திரன், 21, ராஜ்குமார், 26, ஆகியோர், ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதைப் பார்த்து, அவர்களைத் தடுக்க முயற்சித்தார்.
அப்போது, மூவரும் சேர்ந்து, பீர் பாட்டிலால் அஜய்யை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அஜய், ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து விசாரித்த பெரும்பாக்கம் போலீசார், ராமச்சந்திரனை கைது செய்தனர். தலைமறைவான பாளையம் மற்றும் ராஜ்குமாரை தேடிவந்தனர். இதில் பாளையம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாளையம் தன் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அப்போது, பாளையத்தின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் வந்து, அவரை விடுவிக்கும்படி மிரட்டி போலீசாரின் சட்டையை கிழித்து சாலையில் கிடந்த கற்களை எடுத்து காவல் நிலையம் மீது வீசி, ரகளையில் ஈடுபட்டனர்.
இதில், சப் - இன்ஸ்பெக்டர் சிவா, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சிவகுமார், காவலர்கள் மோகன், நாகராஜன், செந்தில், ராமர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சித்தாலப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
தாக்குதலில் ஈடுபட்ட பாளையத்தின் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், பாளையத்தின் உறவினர்கள் தேவி, 41, லலிதா, 23, ஆகியோர், தங்களை போலீசார் தாக்கியதாக கூறி, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.