/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5 கோடியில் சாலை அமைத்தும் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
ரூ.5 கோடியில் சாலை அமைத்தும் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ரூ.5 கோடியில் சாலை அமைத்தும் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ரூ.5 கோடியில் சாலை அமைத்தும் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 04, 2025 12:34 AM

ஆவடி,ஆவடி மாநகராட்சி, 18வது வார்டு, சின்னம்மன் கோவில் சாலையில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ளன. தார்ச்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில், தி.மு.க., தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம், அதிகார பொறுப்பை ஏற்றதும், 'டெண்டர்' விடப்பட்டு, 2022 ஜனவரியில் பணிகள் துவக்கப்பட்டன.
அதன்படி, மூலதன மானிய நிதியில் இருந்து, ஆவடி மாநகராட்சியில் முதல் முறையாக, 5 கோடி ரூபாயில், 5,479 அடி நீளம், 32 அடி அகலம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
சாலை அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து சுரண்டப்பட்டது போல், ஜல்லி வெளியே தெரிகிறது.
தவிர, சாலை நடுவில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடி சரியாக அமைக்கவில்லை என பணியின் போது, 'தினமலர்' சுட்டிக்காட்டியது. தற்போது, இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பல பாதாள சாக்கடை மூடிகள், உடைந்து உள் வாங்கி ஆபத்தான வகையில் காட்சியளிக்கிறது.
கடந்த மாதம் 9ம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில், இந்த பிரச்னை குறித்து அப்பகுதி கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விபத்திற்கு வித்திடும் சாலை இயந்திர நுழைவாயில்களால் அபாயத்தில் பயணித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சேதமடைந்த சாலை மற்றும் பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து வாகன ஒட்டி ஒருவர் கூறுகையில், 'கோடிகள் செலவு செய்து போடப்பட்ட சாலை, இரண்டு ஆண்டுகளில் பல்லிளித்து காட்சியளிக்கிறது. இதன் வாயிலாக மக்களின் வரிப்பணம் வீணடித்ததோடு, சாலையின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. திறந்துள்ள பாதாள சாக்கடை மூடிகள் விபத்திற்கான குறியீடு போல துருத்தி நிற்கிறது' என்றார்.