/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் அதிகரிக்கும் தண்ணீர் லாரிகள் நன்மங்கலத்தில் வாகன ஓட்டிகள் பீதி
/
மீண்டும் அதிகரிக்கும் தண்ணீர் லாரிகள் நன்மங்கலத்தில் வாகன ஓட்டிகள் பீதி
மீண்டும் அதிகரிக்கும் தண்ணீர் லாரிகள் நன்மங்கலத்தில் வாகன ஓட்டிகள் பீதி
மீண்டும் அதிகரிக்கும் தண்ணீர் லாரிகள் நன்மங்கலத்தில் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : மார் 12, 2024 12:27 AM
நன்மங்கலம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் பகுதியில், தனியார் தண்ணீர் லாரிகளால் விபத்துகள் அதிகரிப்பதோடு, சாலைகளும் நாசமாவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:
நன்மங்கலம், ராஜாஜி நகரைச் சேர்ந்த லியோராஸ்ரீ என்ற மாணவி, 2023 அக்டோபரில், தாய் கீர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில், பள்ளிக்குச் சென்றபோது, வேகமாக வந்த குடிநீர் லாரி மோதியதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை பகுதியில், வணிக ரீதியாக செயல்பட்டு வந்த 36 தண்ணீர் கிணறுகளின் மின் இணைப்புகளை, செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின்படி, மின் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், குடிநீர் எடுக்கப்பட்ட கிணறுகள் மூடப்பட்டன. இதனால், மேடவாக்கம்- - மடிப்பாக்கம் சாலையில், குடிநீர் லாரி எதுவும் பயணிக்கவில்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர்.
ஆனால், சில வாரங்களிலேயே, குடிநீர் எடுக்கப்பட்ட கிணறுகளுக்கு அதிகாரிகள் மீண்டும் மின் இணைப்பு வழங்கத் துவங்கினர். இது மெல்ல அதிகரித்து, தற்போது, கடந்த ஆண்டைப் போல, முழு வீச்சில் குடிநீர் லாரிகள் இயங்கத் துவங்கி உள்ளன.
இப்பகுதியில், முன்பு விவசாயம் செய்தவர்கள், அதற்காக இலவச மின்சார இணைப்பு பெற்றனர். கடந்த 10 ஆண்டுகளில், விவசாய இடங்களை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தி, கிணறுகளை மட்டும் வைத்துக்கொண்டு, அவற்றின் வாயிலாக குடிநீர் விற்பனை தொழிலில் முறைகேடாக இறங்கி உள்ளனர்.
தற்போது, மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடப்பதால், மேடவாக்கம் - -மடிப்பாக்கம் சாலையின் அகலம் பாதியாக சுருங்கிவிட்டது.
இந்நிலையில், மணிக்கு 30 தண்ணீர் லாரிகள் இவ்வழியாக பயணிப்பதால், சாலைகள் நாசமாவதோடு, விபத்து அச்சத்துடனேயே, வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டி உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தனியார் தண்ணீர் லாரிகளை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

