ஆமை வேக சாலை சீரமைப்பு பணி: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ஆமை வேக சாலை சீரமைப்பு பணி: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
UPDATED : நவ 24, 2026 10:20 PM
ADDED : நவ 24, 2026 10:14 PM

மாதவரம்: மாதவரம் - வடகரை மாநில நெடுஞ்சாலை சீரமைப்புப் பணி மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் வடகரை சந்திப்பில் தொடங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே வடக்கு உள்வட்டச் சாலையில் மணலி 200 அடி சாலை சந்திப்பில் இணைகிறது. 6 கி.மீ., நீளமுள்ள இச்சாலையின் ஒரு பகுதி சென்னை மாநகராட்சி எல்லையிலும், மற்றொரு பகுதி திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் இச்சாலையில் மழைநீர் கால்வாய் விரிவாக்கப் பணி நடந்தது. இதற்காக பாதி சாலை மூடப்பட்டு, ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. கால்வாய்ப் பணி முடிந்ததும் சீரமைப்புப் பணி தொடங்கியது. இதற்காக தமிழக அரசு, நெடுஞ்சாலைத் துறைக்கு 3.95 கோடி ரூபாய் ஒதுக்கியது. இருப்பினும், கடந்த சில வாரங்களாகப் பணி மந்தமாக நடக்கிறது.
இதனால் ஒரு மார்க்கத்தில் மட்டுமே வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
எண்ணுார் துறைமுகங்கள், மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, காஸ் நிரப்பும் மையம், உரத் தொழிற்சாலை ஆகியவற்றுக்குச் செல்லும் கனரக வாகனங்களும் இச்சாலையைப் பயன்படுத்துகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், குடியிருப்புவாசிகளின் சிரமத்தைப் போக்கவும், மழை தீவிரமடைவதற்கு முன் பணியை விரைந்து முடிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
