/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேவையில்லாத இடத்தில் 'யு - டர்ன்' ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
தேவையில்லாத இடத்தில் 'யு - டர்ன்' ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் தவிப்பு
தேவையில்லாத இடத்தில் 'யு - டர்ன்' ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் தவிப்பு
தேவையில்லாத இடத்தில் 'யு - டர்ன்' ஓ.எம்.ஆரில் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : நவ 11, 2024 01:44 AM

சோழிங்கநல்லுார்:ஓ.எம்.ஆரில் டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில், சிக்னல்களை அகற்றி, 'யு - டர்ன்' செய்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஓ.எம்.ஆரில் முக்கிய சந்திப்பாக, குமரன் நகர் உள்ளது. ஓ.எம்.ஆரில் இருந்து குமரன் நகர் சந்திப்பில் திரும்பி, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை வழியாக, செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.
சோழிங்கநல்லுார் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிக்காக, மூன்று வழி சாலையை ஒரு வழியாக மாற்றியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, ஓ.எம்.ஆரில் இருந்து மேடவாக்கம், தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களும், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையை பயன்படுத்துகின்றன. இதனால், இந்த சாலையில் வழக்கத்தைவிட அதிக வாகனங்கள் செல்கின்றன.
தொடர் நெரிசலை தடுக்க, குமரன் நகர் சந்திப்பு சிக்னலை அகற்றி, யு - டர்ன் அமைக்கப்பட்டது. இந்த சந்திப்பை கடந்து, 100 அடி துாரத்தில் வாகனங்கள் எளிதாக திரும்பும் வகையில், யு - டர்ன் அமைக்க இடவசதி உள்ளது.
ஆனால், 2,100 அடி துாரத்தில், தனியார் கல்லுாரி வாசல் எதிரே, யு - டர்ன் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், 1.5 கி.மீ., சுற்ற வேண்டி உள்ளது.
தனியார் கல்லுாரியில் இருந்து திடீரென வெளியே வரும் வாகனங்களால், ஓ.எம்.ஆரில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
குமரன் நகர் சந்திப்பின், வடக்கு திசையில் உள்ள யு - டர்ன் வழியாக, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து நடக்கிறது. அதனால், யு - டர்ன் மாற்றி அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
குமரன் நகர் சந்திப்பு சிக்னல் அகற்றிய இடத்தில் இருந்து, 100 அடி துாரத்தில் யு - டர்ன் அமைத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.
அந்த இடத்தில் பணி நடந்தால், அதற்கு முன், பின் மாற்றி அமைத்து கொள்ளலாம். இதற்கு ஏற்ப பணிகளை திட்டமிட, மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறி உள்ளோம்.
ஆனால், சில ஊழியர்கள் தன்னிச்சையாக, தனியாருக்கு சாதகமாக யு - டர்ன் அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் பற்றாக்குறையால், யு - டர்ன் சந்திப்பில் வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் திணறுகிறோம். உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.